தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக சர்வதேசம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக சர்வதேசம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும்

தாயக தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக சர்வதேசம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது உரிமைப் போராட்டத்தில் நாம் இழந்தவை ஏராளம். குறிப்பாக கடந்த முப்பது வருட விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஆயிரமாயிரம் இழப்புக்களைச் சந்தித்துள்ளோம். அந்த உரிமைப் போராட்டத்திற்கு பயங்கரவாதப்பட்டம் சூட்டி 2009 இல் சிங்கள பெரும்பான்மை அரச நிகழ்ச்சி நிரலில் அதனை அரசாங்கம் மௌனித்தது.

அதுமட்டுமன்றி உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தினை மௌனிக்கச் செய்வதற்காக தமிழினத்தினை அழித்தொழிக்க வேண்டும் என்ற சிங்கள பௌத்தத்தின் நிலையான நிகழ்ச்சி நிரலையும் அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்தார்கள்.

தமிழினத்தின் மீது இனவழிப்பினை கட்டவிழ்த்துவிட்டு ஆட்சியாளர்கள் தற்போது வரையில் சர்வதேசத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழினம் திட்மிட்டு அழிக்கப்பட்டபோது சர்வதேசம் தலையிடவில்லை. பின்னர் நீதிக்கான தமிழினத்தின் குரல் எழுந்தபோது அதில் சர்வதேசம் தலையிட்டாலும் உள்நாட்டு ஆட்சியாளர்கள் அதனை பொருட்டாக எடுத்துக் கொள்வதாக இல்லை.

இப்பொழுது இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தினால் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. இந்த பயங்கரவாதம் சிங்கள, பௌத்த தேசத்தினை இலக்கு வைத்ததை விடவும் தமிழினத்தினையே இலக்கு வைத்துள்ளது. ஏற்கனவே வலிகளின் ரணத்தால் துவண்டு கொண்டிருக்கும் தமிழினத்திற்கு மற்றுமொரு அடியாகவே இந்த பயங்கரவாத தாக்குதல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 90 சதவீதமானர்கள் தமிழர்களே.

அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனத்திற்கு முகங்கொடுத்திருக்கும் தமிழினம் தற்போது பயங்கரவாதத்தின் வெறியாட்டத்திற்கும் முகங்கொடுக்கின்றது. இதனைப் பயன்படுத்தி, தமிழனத்தின் உரிமைக்கான ஜனநாயக குரல்கள் முதல் அனைத்தையுமே சிங்கள, பௌத்த ஆட்சியாளர்கள் தாயகத்தில் முடக்கி விட்டனர்.

அரச பயங்கரவாதம் ஒரு பக்கமும் பயங்கரவாதம் மறு பக்கமுமாக தமிழர்கள் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதனை விடவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தாயகம் எங்கும் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்களும் சந்கேகக் கண்கொண்டு பார்க்கப்படும் நிலையுருவாகியுள்ளது.

ஆட்சியாளர்களுக்கு முண்டுகொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களின் இந்த அவல நிலைமையை வெளிப்படுத்துவதாக இல்லை. அவர்களுக்கான வாழ்வுரிமையை பாதுகாப்பதாகவும் இல்லை.

எனவே, சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கும் தமிழினம், தற்போது தமது இனத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான நகர்வுகளைச் செய்வதற்கு முன்னதாக தனது வாழ்க்கைகான பாதுகாப்பையே எதிர்பார்க்கின்றது.

அந்த வகையில் உடனடியாக சர்வதேசம், தமிழினத்திற்கான பாதுகாப்பு குறித்து கரிசனை கொண்டு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த தாயகத் தமிழர்கள் சார்பில் கோரிக்கை விடுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment