இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக, ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (02) மாலை இடம்பெற்றது. இதன்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில், பொது மக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் பொய்யான தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடுவோர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கூடிய அவதானத்துடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் தராதரமின்றி அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போதைக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் பிரகாரம் சிலர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. முப்படையினரும், பொலிஸாரும் இணைந்து இதற்கான சகல நடவடிக்கைகளையும் 24 மணிநேரமும் மேற்கொண்ட வருகின்றனர்.
அத்துடன் நாடு முழுவதிலும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் சுற்றி வளைப்பு, தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதேபோன்று அவசரகால நிலைமையின் கீழ் முப்படையினருக்கம் எந்தவொரு இடத்தையும் சோதனையிட, சந்தேக நபர்களை கைது செய்ய பொருட்களை கைப்பற்ற முழுமையான அங்கீகாரம் உள்ளது என்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர மாநாட்டில் விமானப் படையின் பேச்சாளர் குறூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment