மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்து சிதறியது - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2019

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்து சிதறியது

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான க்ரூ டிராகன் விண்கலம், கடைசி நேரத்தில் சரியாக இயங்காததால் வெடித்து சிதறியதாக அமெரிக்க எம்பி உறுதி செய்தார்.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக, தனது முதல் விண்கலத்தை அறிமுகம் செய்தது. 

விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலத்திற்கு க்ரூ டிராகன் என பெயரிடப்பட்டது. எலோன் மஸ்க் தலைமையிலான இந்த நிறுவனம், நாசாவுடன் இணைந்து இதற்கான பணிகளை நீண்ட காலமாக மேற்கொண்டது. 

க்ரூ டிராகன் விண்கலத்தில் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்ததால், அதில் பயணிக்கும் விஞ்ஞானிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்த விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் சென்று வர திட்டமிடப்பட்டது. 

இதற்காக க்ரூ டிராகன் விண்கலம், மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த மாதம், க்ரூ டிராகன் விண்கலத்தை (ஆளில்லா விண்கலம்), சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி சோதனை செய்தனர். 

இதனால், இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இந்த விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 
அதேசமயம் விண்கலத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, தொடர்ந்து என்ஜின் சோதனை செய்யப்பட்டது. 

அவ்வகையில், கேப் கனரவல் ஏவுதளத்தில் வைத்து, கடந்த மாத இறுதியில் மீண்டும் என்ஜின் சோதனை செய்யப்பட்டது. அப்போது, திடீரென விண்கலம் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் எழுந்தது. 

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியானது. எனினும், நாசாவோ, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமோ இதனை உறுதிப்படுத்தவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், க்ரூ டிராகன் விண்கலம் சோதனை செய்யப்பட்டபோது, வெடித்து சிதறியதை அமெரிக்காவின் எம்பியும், நாசாவுக்கான பட்ஜெட் கமிட்டி தலைவருமான ரிச்சர்டு ஷெல்பி உறுதி செய்தார். 

விண்கலம் ஒழுங்கற்று இயங்கியதால், முற்றிலும் அழிந்து விட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாக விசாரணையின்போது ஷெல்பி தெரிவித்தார்.

இன்னும் சில மாதங்களில் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ள நிலையில், கடைசிக் கட்ட சோதனை தோல்வியில் முடிந்ததால், விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment