இஸ்லாம் மார்க்கத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை, அமைதியே அந்த மார்க்கத்தின் பிரதான குறிக்கோள் - கொழும்பு பேராயர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 11, 2019

இஸ்லாம் மார்க்கத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை, அமைதியே அந்த மார்க்கத்தின் பிரதான குறிக்கோள் - கொழும்பு பேராயர்

மேற்குலக நாடுகள் தமது வியாபாரத்திற்காக மேற்கொள்ளும் தந்திரங்களுக்காக, முஸ்லிம் மக்களை நாம் எதிரிகளாகக் கருதக்கூடாது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். அத்துடன் மேற்குலகின் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கொழும்பு பேராயர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆயுத விற்பனைக்காக யுத்தங்களைத் தூண்டிவிடும் மேற்குலக நாடுகள்தான் மனித உரிமை தொடர்பில் அதிகமாக பேசுகின்றன. இது தொடர்பில் நாம் வெட்கமடைகிறோம். இவர்களின் செயற்பாட்டால்தான் உலகலாவிய ரீதியில் யுத்தங்கள் இடம் பெறுகின்றன.

முழு உலகையும் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்பதுதான் அவர்களின் பிரதான நோக்கமாகும்.

அமெரிக்காவின் கடற்படையின் கப்பல்கள் அனைத்து இடங்களிலும் உள்ளன. இன்னொரு நாட்டை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவருவதே அவர்களின் பிரதான நோக்கமாகும்.

இவ்விடயம் தொடர்பாக எவரும் எதிர்ப்பினை வெளியிடுவதில்லை. அவர்களின் ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டுமெனில், யுத்தமொன்று இடம்பெற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும்.

சகோதரத்துவமாக வாழ்ந்துவந்த எமது நாட்டின் இரண்டு இனங்கள், 30 வருடங்களாக யுத்தம் செய்தமைக்குக்கூட இவர்கள்தான் காரணமாகும். ஐ.எஸ். தீவிரவாதிகளும் இதனுடன் தொடர்புடைய ஒன்றாகும். இதனால் இஸ்லாம் மதத்தை தொடர்புபடுத்துவது பிழையாகும்.

இஸ்லாம் மார்க்கத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை. அமைதியே அந்த மார்க்கத்தின் பிரதான குறிக்கோள். இவர்களின் சமயத்தை ஆயுத விற்பனையாளர்கள் தமக்கு ஏற்றாற்போல பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது இஸ்லாம் மார்க்கத்துக்கான சவாலாகும்.

இதற்கு முஸ்லிம் மக்கள் ஏமாறக்கூடாது என்பதே எமது நோக்கமாகும். லிபியா போன்ற நாடுகளை அழிவடையச் செய்தமைக்கும் இதுவே காரணம்.

இதனை நான் உணர்ந்த காரணத்தினாலேயே, இலங்கையில் தாக்குதல் இடம்பெற்றவுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளக்கூடாது என்று கத்தோலிக்க மக்களுக்கு அறிவித்திருந்தேன்.

நாம் இன்னொரு மதத்தினை மதிக்க வேண்டும். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சகோதரத்துவத்துடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறானதொரு சமூகத்தை நாம் இலங்கையில் ஏற்படுத்த வேண்டும். இதற்காக அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும்” என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment