கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாதிகள் 10 பேரின் உடல்களும் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் பொலிசாரினால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மத தலைவர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப, மத அனுஷ்டானங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படாது, குறித்த நபர்கள் அடக்கம் செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (02) மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஆயினும் குறித்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 6 சிறுவர்களின் உடல்களையும், பொலிசாரின் தலையீட்டுடன், உரிய மத அனுஷ்டானங்களுக்கு அமைய இன்று (02) பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக, அவர் சுட்டிக்காட்டினார்.
மொஹம்மட் ஸஹ்ரான் எனும் தற்கொலை குண்டு தாக்குதல்தாரியின் மூத்த சகோதரியான மொஹம்மட் ஹாசிம் மதனியா எனும் பெண் நேற்று (01) மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த பெண்ணிடம், ஸஹ்ரானினால் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூபா 20 இலட்சம் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொய் பிரசாரங்கள், பொய்யான புகைப்படங்கள், போலியான வீடியோக்களை வெளியிடுவோர் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படுவதாகவும், அவ்வாறானோர் தொடர்பில் மிக பாரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோன்று அவசரகால நிலைமையின் கீழ் முப்படையினருக்கம் எந்தவொரு இடத்தையும் சோதனையிட, சந்தேக நபர்களை கைது செய்யவும், சந்தேகத்திற்கிடமான சொத்துகளை கைப்பற்றவும் முப்படையினருக்கு முழுமையான அதிகாரம் உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment