அரசியல் இலாபம் தேடும் நோக்கம் எதிர்க் கட்சிக்குக் கிடையாது - மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

அரசியல் இலாபம் தேடும் நோக்கம் எதிர்க் கட்சிக்குக் கிடையாது - மஹிந்த ராஜபக்ஷ

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களை வைத்து அரசியல் இலாபம் தேடும் நோக்கம் எதிர்க் கட்சிக்குக் கிடையாதென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபம் பெற வேண்டுமானால் அதற்கு பல சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் எதிர்க் கட்சியென்ற வகையில் தற்போதைய நிலையில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அது அரசியல் இலாபம் பெறுவதற்காகவல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அகில இலங்கை இஸ்லாமிய சங்கங்களின் உறுப்பினர்களை சந்தித்த போதே எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த எதிர்க் கட்சித் தலைவர் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை வைத்துக் கொண்டு அனைத்து முஸ்லிம் மக்கள் மீதும் குற்றம் சுமத்த முடியாது. 

இத்தகைய பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினர் ஏற்கனவே விடயங்களை தெரிவித்துள்ளனர். அந்தத் தகவல்களுக்கிணங்க செயற்படாமை அரசாங்கத்தின் தவறாகும். இந்நிலையில் அவர்கள் மீது குற்றம் சாட்டுவது சிறந்ததல்ல.

அரசாங்கம் செய்யக் கூடியவற்றை எதிர்க் கட்சியாகிய எம்மால் மேற்கொள்ள முடியாது. நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம்களென அனைத்து மக்களும் ஐக்கியமாக வாழ்ந்தனர். 

பல்லாண்டுகளாக தொடர்ந்த அந்த ஒன்றித்த கலாசாரம் குண்டு வெடிப்பினால் சீரழிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அச்சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment