அதிகாரப் பகிர்வால் முஸ்லிம்களுக்கும் அதிகாரம் கிடைக்குமா? - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

அதிகாரப் பகிர்வால் முஸ்லிம்களுக்கும் அதிகாரம் கிடைக்குமா?

இப்போது சொல்லப்படுகின்ற அதிகாரப்பகிர்வால் முஸ்லிம்களுக்கு ஏழெட்டு மாகாணங்களில் அதிகாரம் கிடைக்காது. அத்துடன், 25 சதவீதமான சிறுபான்மையினரில் 8 சதவீதமானோர் மட்டுமே அனுகூலம் பெறுவர்.

உலக வரலாற்றில் பன்னெடுங்காலமாக பல நிலப்பரப்புக்களை ஆட்சி செய்து வந்த முஸ்லிம்களுக்கு உஸ்மானியப்பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் அரபு நாடுகளைத்தவிர பெரும் ஆட்புலப்பரப்புக்களில் ஆட்சியதிகாரம் கிடைத்தது மிகக்குறைவு சொல்ல வேண்டியுள்ளது.

உலகெங்கும் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்ற போதும், உலக சனத்தொகையில் கால்வாசிப்பேர் இஸ்லாமியர்களாக இருக்கின்ற போதிலும், மேலைத்தேய நாடுகள் தொடக்கம் அரபு தேசங்கள் தொட்டு கீழைத்தேயம் வரை பல காரணங்களால் கடுமையான நெருக்குவாரங்களைச் சந்திக்கும் மதக்குழுமமாக முஸ்லிம்களை காலம் ஆக்கியிருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் மாகாண சபை முறைமையின் அடிப்படையில் ஆளும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்ற ஆறுதல் இருந்தாலும், தேசிய மட்டத்தில் நோக்கினால், ஒற்றையாட்சியின் கீழ் ஆளப்படுகின்ற சமூகமாகவே பொதுவாக முஸ்லிம்களைக் குறிப்பிட முடியும். ஒரு போதும் தனி நாடு வேண்டுமென்றோ, அதிகாரப்பகிர்வு வேண்டுமென்றோ, சமஷ்டி தர வேண்டுமென்றோ முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கியவர்களல்ல. ஆனால், வெளித்தரப்புக்கள் இவ்வாறான நகர்வுகளைச் செய்கின்ற போது, அதன் பக்க விளைவுகள் முஸ்லிம்கள் மீதும் தாக்கஞ்செலுத்த வாய்ப்புள்ளதென்பதை மறுக்க முடியாது.

இனப்பிரச்சினை தீர்வு
இனப்பிரச்சினைத்தீர்வு. அதிகாரப்பகிர்வு, சமஷ்டி முறைமை பற்றியெல்லாம் பேசப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றிய கருத்தாடல்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குறிப்பாக அதிகாரப்பகிர்வென்பது ஒரு குறிப்பிட்டளவான மக்களுக்கு மட்டுமே அதிகாரத்தை வழங்குமென்பதும் ஏனைய சிறுபான்மைச் சமூகத்தினர் அடக்கி ஆளப்படுவதற்கே வழிவகுக்குமென்பதும் இப்போது கவனிப்பிற்குரியதாக மாறியிருக்கின்றது.

உத்தேச அரசியலமைப்பின் உத்தேசிக்கப்பட்டுள்ள அடிப்படையில் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமாயின், அது சில வேளை வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களி;ல் வாழும் முஸ்லிம்களையும் அநேகமாக நாட்டில் வாழும் எல்லா முஸ்லிம்களையும் ஆளுகின்ற சமூகமாக அல்லாமல், ஆளப்படுகின்ற சமூகமாக மாற்றப்படுவார்கள். முஸ்லிம்களை மட்டுமன்றி, கொழும்பிலும் வடக்கு, கிழக்கு, மலையகம் தவிர்ந்த ஏனைய மாநிலங்களில் வாழும் தமிழர்களும் கூட அடக்கி ஆளப்படும் சமூகமாக மாறும் வாய்ப்புள்ளதென்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளமை சர்வ சாதாரணமான விடயமல்ல. அது குறித்து குறிப்பாக, முஸ்லிம்கள் கவனஞ்செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கையில் புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அல்லது அவ்வாறு அரசாங்கம் ஒரு போலித்தோற்றப்பாட்டைக் காட்டுகின்றது. அதன் மூலம் அதிகாரப்பகிர்வு கோட்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வர அரசாங்கம் எண்ணுகின்றது. அதற்கான முழு அழுத்தத்தையும் தமிழ்த்தரப்பும் சர்வதேசமும் கொடுத்திருக்கின்றது. நடைமுறைச்சிக்கல்களை எல்லாம் தாண்டி ஒரு வேளை அரசியலமைப்பு நடைமுறைக்கு வருமாயின், முஸ்லிம்களுக்கும் அதிகாரம் கிடைக்குமா? என்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அதிகாரப்பகிர்வுக்கோட்பாடு என்பது சுருங்கக்கூறின், மத்திய அரசாங்கத்திற்கும் இறையாண்மையுள்ள மாகாண அரசாங்கத்திற்குமிடையில் அதிகாரங்களை ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் பகிர்தல், பிரித்தல் அல்லது அதிகாரங்களை செறிவற்றதாக்குதல் எனச்சொல்ல முடியும். இதில் பல வகைகள் உள்ளதாக அரசறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

சமஷ்டியின் வகை
அதன்படி, மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை முழுமையாக மாகாண அரசாங்கங்களுக்கு பிரித்துக் கொடுத்து அவற்றை சமாந்திர நிலைக்கு கொண்டு வரும் முறைமையும், மத்தியிலுள்ள அதிகாரங்களைப் பகுதியளவில் பகிர்ந்து, கீழ்ப்படிந்த அதிகாரங்களுள்ள ஆட்புலங்களாக மாகாணங்களை மாற்றுகின்ற முறைமையும் பல நாடுகளில் அமுலிலுள்ளது. இதில் முதலாவது முறைமையானது சமஷ்டியின் தன்மையைக் கொண்டதாகவும் இரண்டாவது முறைமை ஒற்றையாட்சியின் தன்மை மேலோங்கியதாகவும் இருக்குமென்று அரசியல் ஆய்வாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில் நோக்கினால், அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபில் ஏக்கிய ராஜிய, ஒற்றையாட்சி என்ற மயக்கமான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பினும். இது ஒற்றையாட்சித் தன்மையுடைய யாப்பே என்று அரசாங்கம் நிரூபிக்க முனைகின்ற போதிலும் கூட, உண்மையில் இது சமஷ்டியின் தன்மையுடைய அரசியல் யாப்பு என்று முஸ்லிம் அரசியல் ஆய்வாளரான சட்டமுதுமாணி வை.எல்.எஸ் ஹமீட் போன்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, “இதுவொரு கார் தான். ஆனால், 40 பேர் பயணிக்கக்கூடிய கார்” என்று சொல்லி மறைமுகமாக ‘பஸ்ஸை’ குறிப்பிடுவது போல, இந்த அரசியலமைப்பும் அமைந்துள்ளதென்று அவர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

உண்மையில் அதிகாரப்பகிர்வெபதும் சமஷ்டி என்பதும் வெவ்வேறு எண்ணக்கருக்கள். ஆனால், அதிகாரத்தைப் பகிர்வதற்கான ஒரு வழிமுறையாக சமஷ்டி தேர்ந்தெடுக்கப்படலாம். இப்போதிருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியமும் சமஷ்டி வடிவிலான ஒரு அதிகாரப்பகிர்வையே வேண்டி நிற்பதாகத் தெரிகின்றது. அதற்கான சட்ட ஏற்பாடுகள் இந்த உத்தேச அரசியல் யாப்பில் மிகவும் சூட்சுமமான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட முடியும்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது பற்றி ஆராயும் குழுவில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் உள்ளடக்கப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க, முஸ்லிம் எம்.பி.க்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? முஸ்லிம் கட்சித்தலைவர்கள் எந்த அடிப்படையில் இதனைப் பார்க்கின்றார்கள் என்பது தெரியவில்லை.

ஆனால், பெடரல் எனப்படும் சமஷ்டி முறைமையின் அடிப்படையில் இவ்வதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படுமாயின், சிறுபான்மை மக்களுக்கு அதிலும் குறிப்பாக, இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம்களுக்கு அதிகாரம் கிடைக்குமா? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் ஓரிரு சிவில் அமைப்புக்கள் முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கருத்தரங்குளையும் கருத்தாடல்களையும் நடாத்தி வருகின்றன.

17 வீதமானோர் பாதிப்பு
பல்லின, பல் கலாசார நாடான இலங்கையில் அதிகாரப்பகிர்வு வேண்டுமென்று தமிழ் தரப்பே கோரி வருகின்றது. அவ்வாறானதொரு கோரிக்கையொன்றை முஸ்லிம்களோ சிங்களவர்களோ முன்வைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட சில அதிகாரங்கள் மாகாணங்களுக்கு கிடைப்பதை பல மாகாணங்களிலுள்ள மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் விரும்புவார்கள் என்றாலும் கூட அதிகாரத்தைப் பிரித்துத்தாருங்கள் என்ற அழுத்தத்தை ஏனைய இரு சமூகங்களும் முன்னிலைப்படுத்தவில்லை.

இலங்கையில் அண்மைக்கால கணக்கெடுப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீதமான மக்களே சிறுபான்மையினராவர். இதில் தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட ஏனைய சிறுபான்மை இனங்களும் உள்ளடங்குகின்றன.

இந்நிலையில், அதிகாரப் பகிர்வுக்கோட்பாட்டின் அடிப்படையில் முழுமையான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கப்படுமாயின், ஒட்மொத்தமாக 8 சதவீதமான சிறுபான்மை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமே அதிகாரம் கிடைக்குமென்று அரசியல் சட்டமுதுமானி வை.எல்;.எஸ்.ஹமீட் சுட்டிக்காட்டுகின்றார்.

அதிகாரப்பகிர்வு நல்ல கோட்பாடு என்றாலும், அந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற இனமே அதிகாரத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அப்படிப்பார்த்தால், வடக்கும், கிழக்கும் இணைந்தால் முஸ்லிம்களுக்கு அதிகாரம் கிடைக்க ஒரு சந்தர்ப்பமுள்ளது. ஆனால், இணைந்த வடகிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையானால் அந்த வாய்ப்பும் இல்லாமல் போகலாம். இவ்விரு மாகாணங்களும் இணையவில்லையென்றால், முஸ்லிம்களுக்கு கிழக்கில் அதிகாரம் கிடைக்கலாம்.

ஆனால், எது எப்படியோ ஏழு அல்லது எட்டு மாகாணங்களில் முஸ்லிம்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போவதில்லை. அப்படியென்றால், முஸ்லிம்கள் இந்த ஏழெட்டு மாகாணங்களில் ஆளப்படும் சமூகமாகவே இருப்பார்கள். அதாவது, ஒரு அரசாங்கத்தின் கீழேயே இந்தப்பாடுபடும் சமூகம், பல அரசாங்கங்களின் கீழ் அடக்கியாளப்படும் நிலை தோன்றலாம் என்று முஸ்லிம் அரசியல் அவதானிகள் எச்சரிக்கின்றனர்.

அத்துடன், உத்தேச யாப்பு நடைமுறைக்கு வருமானால், முஸ்லிம்கள் ஆகக்கூடுதலாக 13 பாராளுமன்ற ஆசனங்களையே பெற முடியுமென்ற விடயமும் ஆபத்தானதாகும்.

மத்திய அரசாங்கம் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்த பிறகு, விரும்பிய நேரத்தில் தலையிட, மீளப்பெற, திருத்தம் மேற்கொள்ள முழுமையான அதிகாரம் மத்திய அரசிற்கு இருக்குமானால், அது ஒற்றையாட்சியின் இலட்சணமாகும். மத்திய அரசாங்கம் தலையிடவே முடியாதென்ற நிலை இருக்குமானால், அது முழுமையான சமஷ்டியாக அமையும். அரைகுறைச் சமஷ்டி நடைமுறையிலுள்ள இந்தியாவில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது, முழுச் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வின் கனதியைப் புரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களின் நிலை
எனவே, முழுமையான சமஷ்டி மூலம் முழு அதிகாரங்களும் மாகாணத்திற்கு வழங்கப்பட்டால் மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது அநியாயம் இழைக்கப்பட்டால், அல்லது வன்முறையொன்றைக் கட்டவிழ்த்து விட்டால், மத்திய அரசாங்கத்தால் எதுவுமே செய்ய முடியாது போகும். மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால், மாகாணங்களுக்கு பாதுகாப்புப் படையினரை கூட அனுப்பி முஸ்லிம்களைக் காப்பாற்ற முடியாத நிலையேற்படும்.

எனவே, அதிகாரப்பகிர்வின் மூலம் அதிகாரங்களைப் பெறாத மாகாணங்களில் இவ்வாறானததொரு நிலை முஸ்லிம்களுக்கு ஏற்படுமாயின், அது முழுமையான சமஷ்டியாக இருப்பதால் மத்திய அரசாங்கமும் தலையிட முடியாதவொரு சூழல் காணப்படுமாயின், முஸ்லிம்களுக்கு ஆபத்து, பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படும் போது என்ன நடக்குமென்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், மேற்படி கருத்து நிதர்சனமாகுமென்றால், முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினங்களுக்கும் கூட பாதகமான விளைவுகள் ஏற்படுமென்பதாகும். அதாவது, இரு மாகாணங்களைத்தவிர ஏனைய ஆட்புலங்களில் வாழும் தமிழர்களும் ஆளப்படுபவர்களாகவே இருப்பார்கள் என்ற வகையில், கொழும்பிலும் தென்னிலங்கையில் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழர்களுக்கும் இதே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதென்று கூறப்படுகின்றது. ஆனால், முஸ்லிம்களின் நிலைமை அதைவிடப் பாரதூரமானது.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்து, மாகாண ரீதியாக முஸ்லிம்களின் ஒன்றுதிரண்ட பலம் பிரிக்கப்பட்ட நிலையில், பல மாகாணங்களில் அதிகாரமற்ற தரப்பாக வாழும் முஸ்லிம்கள், அந்தந்த சிங்கள, தமிழ் பெரும்பான்மை அரசாங்கங்களால் மிகவும் பாரதூரமான அடக்கி ஆளப்படுவார்கள் என்று அபாய ஒலி தட்டிக்கழிக்க முடியாதது.

அத்துடன், ஒன்றாக இருந்த ஒரு நாடு பல அரசாங்கங்களாக பிரிவடைகின்ற சமஷ்டியும் உள்ளது. அதே போல் பல நாடுகள் ஒன்றாகச்சேர்ந்து ஒரு நாட்டை உருவாக்கி அந்த அரசாங்கம் சமஷ்டி முறையில் இயங்குவதும் உள்ளது. இரண்டாவது வகையிலான நாடுகளுக்கு அரசியலமைப்பில் மறுக்கப்பட்டிருந்தால் தவிர தனியாகப் பிரிந்து செல்லும் உரிமை இருக்கும். ஆனால், எவ்வகையான சமஷ்டியைக் கொண்ட நாடாக இருப்பினும், சுயநிர்ணயம் என்ற விடயத்தைப் பயன்படுத்தி பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன என்ற விடயமும் முஸ்லிம்களின் சிந்தனையை தட்டி விட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வை முஸ்லிம்களும் சிங்களவர்களும் கோரவில்லையென்ற போதும், வடக்கு, கிழக்கிற்கு வெளியிலுள்ள ஏனைய மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிரப்படப்போகின்றது. தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படும் போது சிங்கள பெருந்தேசியத்தை சமாளிப்பதற்காக அவர்களுக்கும் அதே வெகுமதி வழங்கும் உத்தியாகவே இது பார்க்கப்படுகின்றது.
ஆனால், இந்த சமன்பாட்டின்படி பார்த்தால், பெரும்பாலான சிங்களவர்களுக்கே அதிகாரப்பகிர்வின் மூலம் கணிசமான ஆளும் அதிகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. 25 சதவீதமான சிறுபான்மையினரில் 8 சதவீதமானோருக்கே அதிகாரம் கிடைக்குமென்றால், மீதமுள்ள ஆளப்படப்போகின்ற 17 சதவீத தமிழர்கள், முஸ்லிம்களின் நிலை என்னவென்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

இத்தனை காலம் போராடி வருகின்ற தமிழர்களுக்கு இனப்பிரச்சினை தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதை யாரும் மறுதலிக்க முடியாது. ஆனால், ஒரு சிறு பகுதி மக்களுக்கு கிடைக்கின்ற அதிகாரத்திற்காக ஏனைய தமிழர்களில் ஒரு தொகுதியினரும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அதிகாரப்பகிர்வை சுகிக்காத, ஆளும் அதிகாரமற்ற ஒரு ஆளப்படும் சமூகமாக மாற்றப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, அரசாங்க தலையீட்டுடனான அல்லது பகுதியளவிலான அதிகாரப்பகிர்வு பற்றிச்சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் அல்லது அதிகார மையம் அநியாயமிழைக்கும் போது மத்திய அரசாங்கம் தலையீடு செய்வவதற்கான சட்ட ஏற்பாடுகள் அரசியலமைப்பினூடாகவே ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஏ.எல்.நிப்றாஸ் 
வீரகேசரி – 31.03.2019

No comments:

Post a Comment