மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமினை அகற்றி முகாமினுள் உள்ள பாடசாலைக் கட்டடத்தை விடுவித்து தருமாறும் மக்கள் போக்குவரத்திற்குரிய வீதியினை திறந்து தருமாறு கோரியும் பிரதேச மக்களினால் வெள்ளிக்கிழமை (8) காலை 9.00 மணியளவில் இராணுவ முகாமிற்கு முன்பாக கவனயீர்ப்புப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
முறக்கொட்டான்சேனை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன், கோறளைப்பற்று பிரதேச சபை உப்பினர்களான க.கமலேஸ்வரன், கு.குணசேகரம், சு.சுதர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் இராணுவ முகாமிற்கு முன்பாக கூடிய பொது மக்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘எமது காணி எமக்கு வேண்டும், “இராணுவமே வெளியேறு, “பாடசாலைக்காணியை உடன் விடுவி, “நாம் மரத்தடியிலும் தகரத்தடியிலும் கல்வி கற்பதா? “கௌரவ பிரதமரே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை, “ஜனாதிபதி அவர்களே, ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை? போன்ற வசனங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் முடிவின் போது, ஜனாதிபதிக்கும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் அரசாங்க அதிபருக்கும் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிடம் பொது மக்களின் பிரதிநிதிகள் கையளித்தனர்.
குறித்த இராணுவ முகாமானது, 1990ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து முறக்கொட்டான்சேனை இராம கிருஸ்ண மிஷன் பாடசாலை அமைத்த காணிக்குள் இயங்கி வருகின்றது. குறித்த இராணுவ முகாமிற்குள் பாடசாலைக் கட்டடம் உட்பட 52 குடியிருப்பாளரின் காணிகள் உள்ளது. சுமார் 11 ஏக்கர் அளவு கொண்டது.
யுத்தம் முடிவடைந்து 10 வருட காலமாகின்ற நிலையில் இன்னும் குறித்த பாடசாலை இராணுவத்தினரால் விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் இராணுவ முகாம் அமைந்துள்ள பாடசாலைக் கட்டடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். ஆனால், இதுவரையும் குறித்த முகாம் விடுவிக்கப்படவில்லை.
எனவே, பாடசாலை மாணவர்களின் கட்டடப் பற்றாக்குறையினைக் கவனத்திற் கொண்டு விரைவாக பாடசாலைக் கட்டடத்தினை விடுவிப்புச் செய்ய நடவடிக்கையெடுக்கப்படுவதுடன், தேவபுரம், களுவன்கேணி கிராமங்களுக்கான பிரதான வீதியினையும் திறந்து தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினைக் கேட்டுக் கொள்வதாக அம்மகஜரில் பிரதேச பொது மக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11.03.2019 ஆம் திகதி ஜானதிபதியினைச் சந்தித்து இதற்கான தீர்வினைப்பெற்று தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் தெரிவித்தார். இம்இராணுவ முகம் வேறிடத்திற்கு செல்வதற்கான அடிப்படைத் தேவைகளை ஜனாதிபதி தமது நிதியொதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்து தருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இருந்த போதிலும், ஏன் இன்னும் குறித்த இராணுவ முகாம் விடுவிக்கப்படவில்லையென சந்தேகம் ஏற்படுகின்றது. இதில் ஏதும் அரசியல் பின்னணி உள்ளதா? என்ற சந்தேகமும் தனக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
No comments:
Post a Comment