பாராளுமன்ற பலத்தைப் பயன்படுத்தி கல்முனையைத் துண்டாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கக் கூடாது - அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

பாராளுமன்ற பலத்தைப் பயன்படுத்தி கல்முனையைத் துண்டாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கக் கூடாது - அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்

பாராளுமன்ற பலத்தைப் பயன்படுத்தி கல்முனையைத் துண்டாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கக் கூடாது. இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் இணைந்து பிரதமருக்கு அழுத்தம் கொடுத்தால் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாதுபோகும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். 

கல்முனையில் சகல இன மக்களும் நீண்ட காலமாக ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் கல்முனையில் பிரதேச செயலகங்களை உருவாக்கி கல்முனையைத் துண்டாட கூட்டமைப்பு முயற்சிக்கக் கூடாது என்றும் கூறினார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் பல கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டபோது நாம் அவருடன் இணைந்திருந்தோம். இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று (நேற்று) பிரதமரைச் சந்தித்து கல்முனையில் இன்னுமொரு பிரதேச செயலகத்தை உருவாக்குவது பற்றி கடுந்தொனியில் பேசியுள்ளனர். 

உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்த்தனவையும் அழைத்து பிரதமர் பேசியுள்ளார். இச்சந்திப்பு முடிந்த பின்னர் அமைச்சர் என்னிடம் விளக்கமளித்தார்.

இன ஐக்கியமும் சமாதானமும் நிலவும் தறுவாயில் கூட்டமைப்பு இனங்களுக்கிடையில் கல்முனையில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்ற விடயத்தை நான் அமைச்சருக்குக் கூறியிருந்தேன். உள்ளூராட்சி சபைகள் என்றும் பிரதேச செயலகங்கள் என்றும் கல்முனையைத் துண்டாடவுத ஏற்புடையதல்ல. 

இவ்வாறான துண்டாடல்களுக்கு இடமளிக்க மாட்டேன் என பிரதமர் உறுதியளித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸூடன் கலந்துரையாடியே இவ்வாறான விடயங்களில் முடிவு எடுக்கப்படும் எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment