தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தடுமாறிக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கூட்டமைப்பாகவே தற்போது செயற்பட்டு வருகிறது என்றே பார்க்கின்றனர். இந்தப் பயணத்தில் தொடர்ந்தும் நாங்கள் பயணிக்க முடியாது. எனவே கூட்டமைப்பு பயணிக்கின்ற பாதை சரி செய்யப்பட வேண்டுமென கோருவதாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய அரசியல் நிலைமையில் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டிலே பல சவால்களை முன்னிறுத்தி உள்ளது. எமது மக்கள் நீண்ட காலமாக திட்டவட்டமாக வெளிப்படுத்தி வந்த அரசியல் நிலைப்பாடு இப்பொழுது நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு காரணம் சிங்கள பௌத்த அரசியல் ஆதிக்க சக்திகள் அல்ல. மாறாக எமது மக்களின் சார்பில் அரசியல் நடாத்திக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்பினரும் என்று தான் கூற வேண்டும்.
இதில் பிரதானமாக கூட்டமைப்பின் பிரதான கட்சியாக தன்னை கருதிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியென்று பகிரங்கமாக கூற வேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது. தலைவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது தலைமைத்துவத்திற்கு உரிமை கோரிக் கொண்டிருப்பவர்கள் ஜனநாயக அரசியல் களத்திலே தமிழ் மக்களை கைவிட்ட துக்க கரமான நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் அரங்கேறியிருக்கின்றன.
ஆகவே இதையிட்டு நாம் மனந்தளரத் தேவையில்லை. எமது மக்கள் எப்பொழுதும் போல இப்போதும் மிக மிக பெரும்பான்மையான எண்ணிக்கையிலே தமது இலட்சியம் தொடர்பிலே உறுதியோடு இருக்கிறார்கள். ஆகவே இந்த நிலைமையை நாங்கள் மாற்றியமைக்க முடியுமென எதிர்பார்க்கின்றோம்.
கூட்டமைப்பு இப்போது தடுமாறிக் கொண்டிருக்கின்றது என்று கூற நான் தயங்கப் போவதில்லை. ஆனால் நாங்கள் அதாவது எமது ரெலோ இயக்கம் மக்களுக்கு கடந்த தேர்தல்களில் எதை எதை முன்வைத்து வந்தததென்பதையும் அதனால் கூட்டமைப்பு ஆதரவைப் பெற்றுக் கொண்டதென்பதையும் ஒரு போதும் மறக்க மாட்டோம். ஆகவே கூட்டமைப்பின் கொள்கைத் திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment