வீதியில் நடமாடும் பிச்சைக்காரர் உட்பட நாட்டின் பிரஜை ஒருவருக்கு 3 இலட்சத்து 64 ஆயிரத்து 684 ரூபா கடன் சுமை இருப்பதாக எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாட்டின் கடன்சுமை அதிகரித்து வருவதுடன், 2019 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையின் கடன்தொகை 15.1 ட்ரில்லியன் ரூபாய்களாகக் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவல்களை முன்வைத்தார்.
இந்த வரவு செலவு திட்டத்தினூடாக 2,079 பில்லியன் ரூபாய்களைக் கடனாகப் பெறுவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளது. எனினும் அரசாங்கத்துக்கு போதிய வருமானம் கிடைக்காது. இதனால் மேலும் 364 பில்லியன் ரூபா கடன் பெறவேண்டும். ஆகவே இந்த ஆண்டுக்காக அரசாங்கம் மொத்தமாக 2,443 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2018ஆம் ஆண்டு முடிவடையும் போது எமது நாட்டின் கடன் 12 ட்ரில்லியன் ரூபாவாகும். இந்த ஆண்டில் மேலும் 2.4 ட்ரில்லியன் பெறப்படும் நிலையில் மொத்தக் கடன் தொகை 14.4 ட்ரிலியனாக அதிகரிக்கும். வெளிநாட்டுக் கடனை அதே தொகையில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் டொலர் பெறுமதி அதிகரிக்குமானால் சர்வதேசக் கடன்களும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டுக்குள் மீண்டும் டொலருக்கான ரூபாவின் விலை வீழ்ச்சி கண்டால் இந்த ஆண்டில் மேலும் 700 பில்லியன் ரூபா கடன் தொகை அதிகரிக்கும். அப்படியாயின் இந்த ஆண்டு இறுதியில் எமது கடன் தொகை 15.1 ட்ரில்லியனாக அதிகரிக்கும்.
நாட்டின் கடன் சுமையை குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று கடன்களை இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. அதாவது 100 க்கு 116 வீதத்தால் நாட்டின் கடன்களை இந்த அரசு அதிகரித்துவிட்டது. இலங்கை பிரஜை ஒருவர் 6,64384 ரூபாவுக்கு கடனாளியாக உள்ளனர். வீதியில் உள்ள பிச்சைக் காரர் ஒருவர் 3,64,684 ரூபாவுக்கு கடனாளியாக உள்ளார்
குழந்தைகள் பிறக்கும்போது அழுவது வழமை. ஆனால் இலங்கையில் பிறக்கும் குழந்தை தான் இலங்கையில் பிறந்து விட்டதை அறிந்து சாதாரண குழந்தைகள் அழுவதை விட அதிக சத்தத்துடன் வீறிட்டு அழுகின்றன. நாட்டின் கடன் நிலைமையைக் கண்டே அவை அழுகின்றன.
கடன் அதிகரிப்பது பிரச்சினையல்ல. கடன் சுமை அதிகரிப்பதே நாட்டிற்கு ஆபத்து. நாம் நாட்டின் ஆட்சியை இந்த அரசிடம் கொடுக்கும் போது கடன் சுமை 72 வீதமாக இருந்தது.
இன்று 84 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலைமை தொடரும் என்றால் 90 வீதமாக அதிகரிக்கும். 2003 ஆம் ஆண்டு 103 வீதமாக இருந்த கடன் சுமையை நாம் 72 வீதமாக குறைத்தோம். ஆனால் இந்த அரசாங்கம் மீண்டும் கடன் சுமையை அதிகரித்து விட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஷம்ஸ் பாஹிம். மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment