சனத் ஜயசூரிய மீதான ICC இன் தடை தொடர்பில் மஹெல ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

சனத் ஜயசூரிய மீதான ICC இன் தடை தொடர்பில் மஹெல ஜயவர்தன

சனத் ஜயசூரியவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்த 2 வருட கிரிக்கெட் தடை தொடர்பாக, முன்னாள் அணித் தலைவரான மஹெல ஜயவர்தன டுவிட்டரில் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தாம் நேசிக்கும் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடை தமக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது என மஹெல ஜயவர்தன தனது டுவிட்டர் தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் ஊழல் மோசடிகள் இருக்குமானால் அதனை வெளிப்படுத்தாதது ஏன் எனவும் அவ்வாறு ஊழல் மோசடிகள் இருப்பின் அதனை வெளிப்படுத்தி இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் விளையாட்டை பாதுகாக்க உதவுமாறும் மஹெல ஜயவர்தன கோரியுள்ளார்.

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் மோசடியான நாடு இலங்கை என கூறுவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த காலத்தில் முயற்சித்தமை பலரது கவனத்தையும் ஈர்த்த ஒன்றாகும்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அணியாகவும் அதிகாரிகளாகவும் இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவினர் இந்நாட்டு வீரர்களையும் அதிகாரிகளையும் விசாரணைகளுக்கு உட்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

சர்வதேசத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இலங்கை மோசடியான நாடு என சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் கடந்த காலத்தில் தெரிவித்திருந்தது.

எனினும், கடந்த காலத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகைதந்து மேற்கொண்ட விசாரணைகளில் உறுதி செய்த எந்தவொரு விடயமும் அவர்களால் அறிக்கையிடப்படவில்லை என்பதும் விந்தையளிக்கும் ஒன்றாகும்.

No comments:

Post a Comment