சிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு சிவசக்தி ஆனந்தன் அவசரக் கடிதம்! - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

சிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு சிவசக்தி ஆனந்தன் அவசரக் கடிதம்!

சிங்களமயமாக்கலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வவுனியா மாவட்டத்தின் ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவ் விகாரையில் பௌத்த மதகுரு ஒருவரும் அவரது காவலாளிகள் இருவரும் தங்கியிருக்கின்றனர்.

மக்களது சொந்த நிலங்களை துப்பரவு செய்வதற்கு தடையாக இருக்கும் வனவள திணைக்களத்தினர், சிங்கள மக்கள் என்ற காரணத்தினால் இவ்விடயத்தில் எந்தவிதமான நடவடிக்கையினையும் எடுக்காத நிலையில், மிக சுதந்திரமாக காடழிக்கப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

வவுனியா கிழக்கு எல்லையிலுள்ள கச்சல் சமளன்குளம் கிராமத்தில் யுத்தம் காரணமாக பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட வவுனியாவிற்குச் சொந்தமான இக்கிராமத்தின் குளம், அனுராதபுர கமநலசேவைத் திணைக்களத்தினரால் புனரமைக்கப்பட்டு சப்புமல்தென்ன எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் அவர்களது சொந்தகாணிகளில் குடியமர்த்துவதற்கு பதிலாக, தமிழர் தாயகத்தின் நிலப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, காடுகளை அழித்து புதிய சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு புறத்தில் இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், மறுபுறத்தில் வனவளத்திணைக்களம் காணிகளைப் பறிக்கின்றது. மகாவலி அதிகார சபை மக்களின் காணிகளை துண்டாடுகிறது. இன்னொரு புறத்தில் தொல்லியல் திணைக்களம் தொன்மச் சின்னங்களை ஆக்கிரமித்து விகாரைகள் அமைக்கின்றது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் நடந்த மண்ணில் நிலத்திற்கான போர் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னரும், குறிப்பாக தமிழ் மக்களின் பூரண ஆதரவுடன் அமைந்துள்ள அரசாங்கம் என்று சொல்லப்படும் உங்களது தலைமையிலான அரசாங்கத்திலும், எமது நில உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் நல்லிணக்கத்திற்கு வழிசமைக்காது.

இத்திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும், பௌத்த மயமாக்கலையும், காடழிப்பையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தி எமது பூர்வீக நிலங்களில் நாம் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment