காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு முடிவு என்ன - கவனயீர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 4, 2019

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு முடிவு என்ன - கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு முடிவு என்ன என்ற கேள்வியை முன்வைத்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நாளினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகமெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வாயினை கறுப்பு துணியால் கட்டி, ‘ஐ.நா.வே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் காணாமல் போனோர்க்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம்’, ‘இலங்கை அரசே எமது அன்புக்குரியவர்கள் எங்கே?’, ‘ஐ.நா.வே பதில் கூறு, புதைத்தது யார்? புதைக்கப்பட்டது யார்?’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் மனித புதைகுழிகள் தொடர்பாகவும், நெடுங்காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் அரசு தீர்வினை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில், கிழக்கு மண்ணிலிருந்து உறவுகளை தொலைத்த தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்காமல் சர்வதேசம் நேரடியாக தலையீடு செய்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment