திரிபோஷா உற்பத்திக்கு சோளம் இறக்குமதி செய்யப்படாது - எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு திரிபோஷா தலைவர் பதிலடி - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

திரிபோஷா உற்பத்திக்கு சோளம் இறக்குமதி செய்யப்படாது - எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு திரிபோஷா தலைவர் பதிலடி

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் வெளியிடும் கருத்துக்கள் அடிப்படையற்றதென, இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் பி.ஜி.எஸ். குணதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

படைப்புழிவின் தாக்கத்தால் பல பயிர்ச் செய்கைகள் பாதிப்புற்றன. இதில் சோளச் செய்கையும் பாதிப்புற்றதால், திரிப்போஷா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இதில் எந்த உண்மைகளும் இல்லை.

இலங்கை திரிபோஷ நிறுவனத்துக்கு திரிபோஷ உற்பத்திக்காக வருடாந்தம் 12,000 மெற்றிக் தொன் சோளமும் 6,000 மெற்றிக் தொன் சோயா அவரையும் தேவைப்படுகின்றது. இவை அமைச்சரவை அனுமதிக்கு இணங்கவே பெற்றுக் கொள்ளப்படுகின்றது. 

இதற்கென 2018 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி தேசியப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு உள்ளூரில் போட்டித் தன்மையுடனான கேள்வி கோரப்பட்டது. 

அதற்கேற்ப கிடைத்துள்ள கேள்விகள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அது கவனத்தில் எடுக்கப்பட்டு அமைச்சரவை குழுவின் அவதானத்துக்குப் பின்னர் தேசிய நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. 

உள்ளூரில் சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டே மேற்படி இந்த டெண்டர் முறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த வகையில் வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை சோளத்தை இறக்குமதி செய்வதற்கான எத்தகைய தீர்மானமும் ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை.

படைப்புழுவின் தாக்கத்தால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை வைத்து அரசியல் நோக்கிற்காக எதிர்க்கட்சிகள் இவ்வாறு போலிச் செய்திகளை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டுக்குள் ஊடுருவிய படைப்புழுவினால் இலட்சக்கணக்கான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டதால் பல விவசாயிகள் நஷ்டமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

படைப்புழுக்களை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்ததுடன் நாடு முழுவதும் விவசாயிகளை விழிப்பூட்டும் செயலமர்வுகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசியல் இலாபம் கருதியே சில விமர்சனங்கள் கட்டவிழ்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment