சிங்களமயமாகும் வவுனியா, மௌனம் காக்கும் தமிழ் தலைமைகள் - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு! - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

சிங்களமயமாகும் வவுனியா, மௌனம் காக்கும் தமிழ் தலைமைகள் - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

வவுனியாவிலுள்ள பல கிராமங்கள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், எனினும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாகவும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கற்சல்சமணங் குளத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சப்புமல்கஸ்கந்த என பெயர் மாற்றி, சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தம் முயற்சிகள் ஒருபுறத்திலும், நெடுங்கேணி பிரதேசத்திற்குட்பட்ட ஊற்றுக் குளம் என்ற தமிழ்க் கிராமத்தில் காடுகள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மறுபுறத்திலும் அண்மைக்காலமாக தீவிரமாக நடபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஊற்றுக்குளத்தில் ஒரு பௌத்த துறவி இரு காவலாளிகளுடன் தங்கியுள்ளதாகவும் அறிய வருகின்றது. இதேவேளை தொல்பொருள் திணைக்களம் சமணங்குளம் விநாயகர் ஆலயத்தினை வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தொல்பொருள் பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வனங்களை பாதுகாப்பதாக பல தமிழ் பேசும் மக்களை அவர்களது பூர்வீக இடங்களில் குடியேறவிடாது தடுத்துவரும் வனவிலங்கு இலாகா, பௌத்த மதகுருமார் காடழிப்பில் ஈடுபடும்போது மட்டும் மௌனமாக இருக்கின்றனர்.

இவ்வாறான அநீதிச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அரசியல் அமைப்பு மாற்றம் தேவையில்லை. சாதாரண ஒரு அமைச்சர் நினைத்தால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவற்றை தடுப்பதற்கு தமிழ் தலைவர்கள் உடன் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்“ என்றும அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment