உணவு பாதுகாப்பு சட்டங்களை மேம்படுத்தவும் அதனை சீராக முறைப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை சுகாதார அமைச்சுடன் இணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வரவுசெலவுத் திட்டத்தில் யோசனையொன்று உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்தை தெரிவித்தார்.
தேசிய ஏற்றுமதி மூலோபாய அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பான வகைகளின் உற்பத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன், இலங்கை தயாரிப்புகளில் சிறந்த தரம் மற்றும் மூலப்பொருட்கள் ஆரோக்கியம் மிக்கதாக அமைந்துள்ளனவா என்பதும் கண்காணிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் கடைப்பிடிக்கப்படும் தேசிய ஏற்றுமதி மூலோபாயம் பற்றியும் அதன் பிரிவுகள் பற்றியும் விளக்கமளிக்கும்போதே இந்திரா மல்வத்தை இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
அபிவிருத்தி உபாய மார்க்கம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவை இணைந்து தேசிய ஏற்றுமதி மூலோபாய அமைப்பினை முன்னெடுத்துள்ளன.
இது கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. புத்தாக்கமும் முதலீடும் கொண்ட ஒரு ஏற்றுமதியை மையமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மூலோபாய அமைப்பின் ஏனைய பிரிவுகளின் முன்னேற்றத்தை பொறுத்தவரை பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பான வகைகள் பிரிவு பாரிய கைத்தொழில் மற்றும் உற்பத்தி பிரிவுகளில் ஒன்றாகும். பலதரப்பட்ட உணவு மற்றும் பான வகைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்துறை இப்போது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இலங்கை தயாரிப்புகளில் சிறந்த தரம் வாய்ந்தவை அத்துடன் அதனை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ஆரோக்கியம் மிக்கவை.
தயாரிப்புக்கான முதலீடுகள் பற்றிய கைத்தொழிலின் அர்ப்பணிப்பு அதன் சந்தையை அபிவிருத்தி செய்கிறது. இத்துறையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் அத்துறையில் உள்ள சிறிய நிறுவனங்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்க முடியும். இலங்கையின் உணவு மற்றும் பானங்கள் துறை அடுத்த வளர்ச்சி பெருக்கத்துக்கு தயாராகவே உள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டங்களை மேம்படுத்தவும் சீரான முறைப்படுத்தும் முறைமையொன்றை அமைக்கவும் சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிரேரணையொன்று 2019தேசிய வரவு செலவு திட்டத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மேற்படி துறையானது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இலங்கை சமையல் வகைகளை உலகுக்கு ஊக்குவிக்கும் 'ஸ்ரீலங்கன் குயிரூன்’ என்ற குறியீட்டு பெயரை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகார சபை (FSSAI) உள்ளூர் உணவு மற்றும் பான தயாரிப்புகளை இந்திய தரத்துக்கு நிர்ணயிக்க மூன்று உள்ளூர் பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு உணவு மற்றும் பான வகைகளை ஏற்றுமதி செய்வோருக்கு இது பெரும் உந்துதல் ஆகும்.
இலங்கை ‘வாசனைத் திரவியங்கள் தீவு’ என்று அழைக்கப்படுகிறது. வாசனைத் திரவியங்கள் மற்றும் அதன் சாறு மற்றும் செறிவுக்கு இலங்கை பெயர்போனது. இத்துறையில் ஏற்றுமதி வருமானத்தை பெருக்குவது மட்டுமன்றி கிராமப்புற பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. தற்போது உலகில் மிகவும் முக்கிய வாசனனைத் திரவிய ஏற்றுமதியாளர்கள் மத்தியில் ஒன்பதாவது இடத்தில் இலங்கை உள்ளது.
குறிப்பாக கறுவா, மிளகு, ஏலம், கராம்பு, சாதிக்காய் ஆகியவை ஏற்றுமதியில் முக்கிய இடம்பெறுகின்றன. 2016 இல் இலங்கையின் வாசனைத் திரவிய ஏற்றுமதி 273 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதேநேரம் உலகின் உண்மையான சிறந்த கறுவாவை பொறுத்தவரை உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளரும் இலங்கை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் கறுவா மற்றும் மிளகை சர்வதேச சந்தையில் சிறந்தவொரு இடத்தை பெறும் வகையிலான குறியீட்டு ஊக்குவிப்பு பிரசாரத்தை ஏற்றுமதி அபிவிருத்தி சபை இவ்வருடம் முன்னெடுக்கவுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் ஆதரவுடன் தேசிய தர பேரவையொன்றை அமைப்பதற்கான வேலை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
2015 முதல் இதுவரை இடம்பெற்றுள்ள இலங்கையின் பண்டங்கள் மற்றும் சேவைகளின் வெளிநாட்டு செலாவணி வரும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 2016 இல் 13.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மேற்படி வெளிநாட்டு செலாவணி வருமானம் 2017 இல் 15.2 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. கடந்த வருடம் (2018) இது 16.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. இவ்வருட் (2019) இது 17.4 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
பண்டங்கள் மற்றும் சேவைகள் துறையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை முன்னெடுக்கவிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கிய அவர், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் துறையின் ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்யும் மற்றும் ஊக்குவிக்கும் பிரதான அரச நிறுவனம் ஏற்றுமதி அபிவிருத்தி சபையாகும். இது தொடர்பான அனைத்து திட்டங்களும் தனியார் துறையின் பங்களிப்புடனேயே மேற்கொள்ளப்படும் என்றார்.
விவசாய, கைத்தொழில் மற்றும் மீன்பிடி துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு சமாந்தரமாக சேவைகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை அதிக அக்கறை காட்டுகிறது. இலங்கையானது பல்வேறு பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பொருட்களை தயாரித்து வருகிறது.
எவ்வாறெனினும் சர்வதே வர்த்தகம் மற்றும் ஆசிய வர்த்தகத்தின் போக்கு மாறி வருவதால் இலங்கையானது அதன் புத்தாக்க மற்றும் புதிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக செயற்பாடுகளை விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தினகரன்
No comments:
Post a Comment