அலுகோசு பதவிக்காக 45 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பப்படிவங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் நேர்முகப் பரீட்சை நடாத்தி அலுகோசு பதவிக்கான வெற்றிடம் நிரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடிப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை எனவும் சிறைச்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அலுகோசு பதவிக்காக வௌிநாட்டுப் பிரஜை ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருள் குற்றஞ்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர்ப்பட்டியல் சிறைச்சாலைகள் அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பட்டியலில் 17 கைதிகளின் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1976 ஆம் ஆண்டே இலங்கையில் இறுதியாக மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில், சந்திரதாச என்பவருக்கே மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment