மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர், நீதிமன்றின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நேற்று தேர்தல்கள் ஆணையாளர் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தாவிடின் தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதற்காக நாம் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு எதிரான ஒரு பாரிய கருத்தாகவே நாம் இதனை எண்ணுகிறோம்.
ஆனால், அவர் பதவி விலகுவது இந்த விடயத்தில் தீர்வாக அமையாது. மாறாக, இந்த விடயத்தை நீதிமன்றின் ஊடாக தீர்க்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.
ஐக்கிய தேசியக் கட்சி தவிர, ஏனைய அனைத்துக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கின்றன. தேர்தலுக்கு முகம் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி அஞ்சுவதாலேயே தேர்தல் பிற்போடப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். இது மக்களுக்கான உரிமையாகும். இந்த உரிமையை மக்களுக்கு அரசாங்கம் நிச்சயமாக பெற்றுக்கொடுக்க வேண்டும்“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment