வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தொடர்ந்தும் வடமாகாணத்திற்கே கடமையில் அமர்த்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.
வடமாகாண சுகாதார தொண்டர்கள், வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாகவிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம், கிளிநாச்சி புகையிரத நிலையம் வரை சென்றது.
கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு ஜனாதிபதி வருகை தரக்கூடும் எனக்கருதி குறித்த குழுவினர், கிளிநொச்சி புகையிரத நிலையம் வரை சென்றிருந்ததோடு ஜனாதிபதி வருகை தராமையால், கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வடமாகாண ஆளுநர் வடக்கில் நேர்மையாக செயற்பட்டு வந்ததாகவும் அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள் இடையில் கைவிடப்பட்டுள்ளதால், அவரை மீண்டும் வடமாகாணத்திற்கே நியமிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.
மேலும் இதன்போது கருத்து வெளியிட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு மகஜர்கள் தம்மிடம் கையளிக்கப்பட்டதாகவும், அவற்றை உடனடியாக ஜனாதிபதியின் கரங்களிற்கு கிடைக்ககூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி விடுத்த அறிவித்தலுக்கமைய, பதவி விலகல் கடிதத்தை அனைத்து மாகாண ஆளுநர்களும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment