ஓர் இனத்துக்காக குரல் கொடுப்போரையும் இனவாதம் பேசுவோரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் - முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

ஓர் இனத்துக்காக குரல் கொடுப்போரையும் இனவாதம் பேசுவோரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் - முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்

அரசியல்வாதிகள் இனவாதத்தை தமது அரசியல் அரியணைக்கான ஆயுதமாகப்பயன்படுத்த இனியொரு போதும் மக்கள் அனுமதிக்கக்கூடாதென அனைத்து சமூக மக்களிடமும் தான் அறைகூவல் விடுப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இலங்கையில் காலகாலமாக அரசியல்வாதிகளிடமும் மக்களிடமும் இருந்து வரும் இனவாத அரசியல் போக்கு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து திங்கட்கிழமை (31.12.2018) அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஓர் இனத்துக்காக குரல் கொடுப்போரையும் இனவாதம் பேசுவோரையும் மக்கள் தெளிவாக அடையாளங்கண்டு கொண்டு அவர்களை நிராகரிக்க வேண்டும். கடந்த காலங்களில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டதை நாம் நின்று நிதானித்து அறிந்து கொள்ள வேண்டும்.

இனவாதச்செயற்பாடுகளில் புதிய யுக்திகளைக் கையாண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வழமை போன்று எதிர்வருகின்ற காலங்களிலும் முன்னெடுக்கப்படலாம். இதனை முறியடித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கிடையேயான நல்லுறவைப்பேண வேண்டும்.

இனவாதம் பேசும் இலங்கை அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் கூனிக்குறுகி நிற்கும் சூழ்நிலையை இலங்கை வாழ் அனைத்துச் சமூகங்களும் அணி திரண்டு ஓரணியில் நின்று ஏற்படுத்த வேண்டும். உலகம் விஞ்ஞானத்தில் முன்னேறி வீறு நடைபோட்டுக் கொண்டிருக்கும் போது, இன்னமும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கும் இலங்கை இனவாத அரசியல்வாதிகள் கூனிக்குறுகி தலைமறைவாகும் காலம் வெகுவிரைவில் வரும் என்ற நம்பிக்கை எனக்குமுண்டு.

பல்லின சமுதாயங்கள் பாரம்பரியமாக பரஸ்பர உதவி ஒத்தாசையுடனும் மதிப்பு மரியாதைகளுடனும் வாழ்ந்து வந்த நமது தேசத்தில் இனவாதத்துக்காக குரல் கொடுப்பது வெட்கக்கேடான ஒரு செயற்பாடாகும். மறுவார்த்தையில் கூறுவதாயின், இனவாதிகள் மனித மாமிசத்தையும் மலத்தையும் உண்ணும் காட்டு மிராண்டித்தனத்திற்கு ஒப்பானவர்ளாக மனித நேயத்தில் வளர்ச்சியடைந்த சமுதாயத்தினரால் நோக்க முடியும்.

கடந்த காலங்களில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டதை அறியாமல் தமது அரசியல் வேணவாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக சில மனித சமுதாய விரோதிகள் இனவாதத்தை தமது கையிலெடுத்துள்ளார்கள். நாளடைவில் இந்தப்போக்கு அவர்களுக்கே ஆபத்தானதாக வந்து முடியும். ஏனென்றால், உலக வரலாறு ஒரு போதும் பின்னோக்கிப் பயணிப்பதில்லை.இனத்துக்காய் குரல் கொடுக்கும் போர்வையில் இனவாதம் பேசுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அது மாத்திரமின்றி, இந்த இனவாதச் செயற்பாடுகளில் புதிய யுக்திகளைக் கையாண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை எச்சரிக்கையோடு நாம் எதிர்கொள் வேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பாரம்பரியமாக தங்களிடையே தொன்று தொட்டு இருந்து வந்த தமக்கிடையேயான நல்லுறவைப் பேண வேண்டும்.

30 வீதமான சிறுபான்மையினருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த நாட்டில் தொடருமானால் அதன் விளைவாக இந்த நாட்டில் வாழும் 70 சதவீதமான சிங்கள மக்களும் நஷ்டமடைவார்கள் அதேபோல, சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களால் அடுத்துள்ள சிறுபான்மையினரான தமிழ் மக்களும் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment