உடவளவையில் கொம்பன் யானை குட்டி சடலமாக மீட்பு - காது, தலைப் பகுதியில் சூடு - இது வரை எவ்வித தீங்கும் விளைவிக்கவில்லை என தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 1, 2018

உடவளவையில் கொம்பன் யானை குட்டி சடலமாக மீட்பு - காது, தலைப் பகுதியில் சூடு - இது வரை எவ்வித தீங்கும் விளைவிக்கவில்லை என தெரிவிப்பு

உடவளவை நீர்தேக்கத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யானைக் குட்டியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (01) அதிகாலை 2.00 - 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் சுமார் 7 வயது மதிக்கத்தக்க கொம்பன் வகை யானை குட்டி ஒன்றே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்தார்.

உடவளவை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றப்படும் பகுதியில் வைத்து குறித்த யானையின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக, உடவளவை தேசிய சரணாலயத்தின் பொறுப்பாளர் ஆர்.பி. சமரநாயக்க தெரிவித்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட யானையின் பிரேத பரிசோதனையில், அதன் தலை மற்றும் காது பகுதியில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து குறித்த யானை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடவளவை தேசிய சரணாலயத்தின், வனவிலங்கு வைத்தியர் மாலக்க அபேவர்தனவினால் குறித்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சரணாலயத்தின் நீர் வெளியேற்றப்படும் பகுதி மற்றும் 5ஆம் கட்டை போன்ற பகுதிகளில் அடிக்கடி உலாவரும் சுமார் ஏழு வயதான இரண்டு மீட்டர் உயரம் கொண்ட குறித்த யானையினால் இதுவரை பிரதேசவாசிகள் எவருக்கும் எவ்விதமான பாதிப்பும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். குறித்த யானைக்குட்டியின் தாயும் வனவிலங்கு பூங்காவில் உலா வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடவளவை - தனமல்வில பிரதான வீதியிலிருந்து குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சரணாலயத்தின் பொறுப்பாளர் ஆர்.பி. சமரநாயக்க தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் ஏதும் தெரிந்தால் 1992 அல்லது உடவளவை தேசிய பூங்காவிற்கு 047 3475892 எனும் இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment