சவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில் கஷோகி கொல்லப்பட்டார் - அமெரிக்க உளவுப்படை - News View

About Us

About Us

Breaking

Saturday, November 17, 2018

சவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில் கஷோகி கொல்லப்பட்டார் - அமெரிக்க உளவுப்படை

துருக்கி நாட்டு தூதரகத்தில் மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்கு சவுதி இளவரசர் மீது அமெரிக்க உளவுப்படை குற்றம்சாட்டியுள்ளது.

சவுதி அரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

ஜமால் கஷோகியை தூதரகத்துக்கு வரவழைத்து சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் அவரை தீர்த்துகட்டி விட்டு, பிரேதத்தை மறைத்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கான ஆதாரமாக சவுதி தூதரகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில கண்காணிப்பு கேமரா பதிவுகளை துருக்கி நாட்டு போலீசார் வெளியிட்டனர். இதை சவுதி அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இதன் அடிப்படையில் புலனாய்வு செய்துவந்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அந்த விசாரணையை இன்று நிறைவு செய்தது. 

சவுதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் உத்தரவின்பேரில் அங்கிருந்து சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான தனி விமானத்தில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகருக்கு வந்த 15 பேர், இங்குள்ள சவுதி நாட்டு தூதரகத்துக்கு ஜமால் கஷோகியை வரவழைத்தனர்.

தூதரகத்தினுள் அவரை மயக்கத்துக்குள்ளாக்கி துண்டுத்துண்டுகளாக வெட்டிக் கொன்று, உடலின் துண்டங்களை ஒரு தூதரக அதிகாரி வீட்டின் கிணற்றில் போட்டு மறைத்து விட்டனர் என இந்த விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

பட்டத்து இளவரசர் என்பதால் நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கும் முஹம்மது பின் சல்மானின் உத்தரவு இல்லாமலும், கவனத்துக்கு வராலும் இதுபோன்ற எந்த காரியமும் நடக்க முடியாது என சி.ஐ.ஏ. உயரதிகாரி ஒருவரும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment