அரசினால் முன்னெடுக்கப்படும் மகாவலி ‘எல்’ வலயத் திட்டப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்று (03) புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
மகாவலி ‘எல்’ திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் ஆதாரங்களுடன் கூட்டமைப்பு வெளிப்படுத்தியது.
முன்னர் இடம்பெற்ற கூட்டத்தில் மகாவலி ‘எல்’ வலயம் ஊடாக எவருக்கும் காணி அனுமதிகள் வழங்கப்படவில்லை எனக் கூறிய ஜனாதிபதி, நேற்றைய கூட்டத்தில் அவ்வாறு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளமையைத் தான் கண்டறிந்துள்ளார் எனத் தெரிவித்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.
ஜனாதிபதி அவ்வாறு வழங்கப்பட்ட காணி அனுமதிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்றும், மகாவலி ‘எல்’ வலயத் திட்டத்தை இடைநிறுத்தப் பணித்துள்ளார் என்றும் தம்மிடம் கூறினார் என சுமந்திரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
நேற்றைய கூட்டத்தில் மகாவலி ‘எல்’ திட்டம், தனியார் காணி ஆக்கிரமிப்பு, வடக்கு – கிழக்கு வீடமைப்புத் திட்டம் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment