அலரி மாளிகையில் இருந்து அரச அதிகாரிகள் நீக்கம் : பொருட்களை சோதனையிடச்சென்ற அதிகாரிகளுக்கு இடையூறு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

அலரி மாளிகையில் இருந்து அரச அதிகாரிகள் நீக்கம் : பொருட்களை சோதனையிடச்சென்ற அதிகாரிகளுக்கு இடையூறு

அலரி மாளிகையில் இருந்து அரச அதிகாரிகள் நீங்கியுள்ளமையினால் அங்கு எவ்வகையிலும் அரச நிர்வாகம் இடம்பெறவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்தார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறிக்கொண்டு இரண்டு பேர் இன்று மதியம் வந்ததாக ரணில் விக்ரமசிங்க தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் அங்கு பிரவேசித்து அலரி மாளிகையில் உள்ள அலுவலக உபகரணங்களைப் பரிசீலனை செய்து அதனை நீக்குவதற்கு தயாரான போது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது அலரி மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டு அமைதியின்மையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும், அவர்களின் அடையாளத்தைப் பரிசீலித்து அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அலரி மாளிகையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார்.

அலரி மாளிகையில் சேவையில் ஈடுபட்டிருந்த அரச அதிகாரிகள் இன்று பொது நிர்வாக அமைச்சிற்கு மீண்டும் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் வௌிநாட்டு ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். எனினும், அதனை ஔிப்பதிவு செய்ய உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

வழமை போன்று இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிவில் அமைப்புகள் அலரி மாளிகையில் ஊடக சந்திப்புக்களை நடத்தினர்.

No comments:

Post a Comment