வழக்கு முடியும் வரையில் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரியந்த ஜயவர்தன, தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று (05) இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அதன்படி இந்த மனுவை எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பந்தமான வழக்கில் தனக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் அதே குற்றச்சாட்டில் குருநாகல் மேல் நீதிமன்றத்தால் வழக்கு முடியும் வரையில் மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையானது சட்டத்திற்கு முரணானது என்று ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இதனால் குருநாகல் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு வேண்டி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த போதும் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்ததாக மனுதாரான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு சட்ட விரோதமானது என உத்தரவு வழங்குமாறும் தன்னை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் வேண்டியுள்ளார்.
No comments:
Post a Comment