இலங்கை அரச தலைவர்கள் கொலை சூழ்ச்சி : கைது செய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

இலங்கை அரச தலைவர்கள் கொலை சூழ்ச்சி : கைது செய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

இலங்கை அரச தலைவர்களைக் கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக வெளியான தகவல் குறித்த விசாரணையின் போது கைது செய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரிக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. 

கைது செய்யப்பட்ட இந்தியர், கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று (27) வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒக்டோபர் 23 ஆம் திகதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். 

மனநல, உடல் ரீதியான நோய்கள் தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு அவரை முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். 

அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இது குறித்து விசாரிக்க, பொலிஸ் அதிகாரி, நாலக்க டி சில்வாவை இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் குரல் மாதிரி ஒன்றை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை நாலக்க டி சில்வாவிற்கும், இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் அறிவித்தார். 

பெயர் மார்சிலி தாமஸ். இந்தியாவின் கேரளா, திருவனந்தாபுரம் என்ற முகவரியை கைதான இந்தியர் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். 

இவர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளார். இவரது சுற்றுலா விசா காலாவதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சரியான தகவல்கள் இல்லையென பொலிஸ் பேச்சாளர் கூறினார். 

இலங்கையின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களுக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பான தகவல் தன்னிடம் இருப்பதாகக் கூறும் இந்தியர், இலங்கை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக வெளியாகும் ஊடகச் செய்திகள் பற்றி தமக்கும் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது. 

இந்த விவகாரத்தை மிகவும் பாரதூரமானதாக கருதி, இலங்கை அதிகாரிகள் வழங்கிய குறைந்த பட்ச தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபரின் பின்னணி பற்றி விசாரணை நடத்துமாறு இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும், உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை 2000ஆம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். 

இந்தத் தகவலை இலங்கை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அது சம்பந்தமாக முழு விசாரணையை நடத்த இந்திய உயர் ஸ்தானிகராலயம் உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். 

´´ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டவர்களை கொலை செய்ய சூழ்ச்சி நடப்பதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரித்து வருகிறோம். 

இந்த விசாரணைகளில் இந்தியர் ஒருவரும் கைது செயப்பட்டுள்ளார். இந்த நபர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வந்துள்ளார். 

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை விசாரிக்கின்றனர். அவருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பதை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை. 

இது குறித்து விரிவாக விசாரணை செய்ய வேண்டியுள்ளது. கொலை சதி தொடர்பில் எவ்வித முக்கியமான தகவல்களும் இந்தியப் பிரஜையிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை. 

நாமல் குமார என்ற நபரே ஊடகங்களில் அரச தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தார். இதனை அவதானித்துள்ள இந்தியப் பிரஜை, இது குறித்து கேட்கவே நாமல் குமாரவின் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது´´ என்றார் பொலிஸ் பேச்சாளர். 

கைது செய்யப்பட்டுள்ள இந்தியர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சந்தேகிக்கக் கூடிய பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர். 

கைதுசெய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதம் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அறிவித்தனர். 

பிபிசி

No comments:

Post a Comment