PE+ வர்த்தக நாமத்தை போலியாகப் பயன்படுத்திய நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா அபராதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 8, 2018

PE+ வர்த்தக நாமத்தை போலியாகப் பயன்படுத்திய நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா அபராதம்

PE+ வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக உற்பத்திகளை மேற்கொண்ட நிறுவனம் ஒன்றுக்கு எதிராக நேற்று (07) நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமது நிறுவன வர்த்தகக் குறியீட்டை போலியாகப் பயன்படுத்தி, டயமன்ட் வெட்டும் டிஸ்களை உற்பத்தி செய்தமைக்கு எதிராக PE+ தனியார் நிறுவனம் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.

PE+ நிறுவனத்தின் நுகர்வோர் சேவை அழைப்பு இலக்கம், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொழிற்சாலை முகவரி என்பன நிறுவனத்தின் அனுமதியின்றி கொள்கலன்களின் பொறிக்கப்பட்டிருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த நிறுவனம் மக்களைத் தவறாக வழிநடத்தி, புலன் சொத்துகள் சட்டத்தின் சரத்துகளை மீறியுள்ளதாக PE+ நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது அநீதியான வர்த்தகப் போட்டி எனவும் புலன் சொத்து சட்டத்தின் கீழ் உள்ள PE+ வர்த்தகக் குறியீட்டிற்கான உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் குற்றத்தை மறுத்துவந்த குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதற்கமைய, குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்தார். இது புலன் சொத்து சட்டத்தின் கீழ் விதிக்கக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகை ஆகும்.

முறைப்பாட்டாளரான PE+ நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், போலி உற்பத்திகளை அழிக்குமாறு குறித்த நிறுவனத்திற்கு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாழைத்தோட்ட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து PE+ வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட போலியான பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment