கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் மூன்றாவது சபை அமர்வு கடந்த 28.06.2018ம் திகதி வியாழக்கிழமை தவிசாளர் ஐ.ரி.அமிஸ்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, மட்டக்களப்பு கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் பாரிய சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்திய ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற காணிவேல் களியாட்ட நிகழ்வு குறித்து ஆராயப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குச் சொந்தமான மைதானத்தில் இக்களியாட்ட நிகழ்வு நடைபெற அனுமதி வழங்கியிருந்த நிலையில் தவிசாளர் உள்ளடங்களாக 18 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் பத்து உறுப்பினர்களும், பிரதேசத்தின் முக்கிய பெறிய ஜூம்ஆப் பள்ளிவாயல்கள், சமூக ஆர்வலர்கள் இக்களியாட்ட நிகழ்வுக்கு தமது கடும் எதிர்ப்பினையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்த நிலையில், இதனை உடனடியாக தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையினை பெருநாள் தினத்தன்று உத்தியோகபூர்வமாக தவிசாளருக்கு எழுத்து மூலமாக விடுத்த போதிலும், இது விடயத்தில் எவ்வித நடவடிக்கையினையும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மேற்கொள்ளவில்லை
இது குறித்து மூன்றாவது சபை அமர்வின் போது தவிசாளரின் தன்னிச்சையான முடிவு, பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமை, பள்ளிவாயல்களின் கோரிக்கையை ஏற்கத்தவறியமை போன்ற விடயங்களுக்காக தவிசாளருக்கெதிராக பலத்த கண்டனம் சபை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நோன்புப் பெருநாள் மற்றும் அதற்கடுத்த தினங்களில் நடாத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் ஆண், பெண் கலப்பு என இஸ்லாமிய கலாசார ஒழுக்க விழுமியங்களைச் சீரழிக்கும் வகையிலேயே இக்களியாட்ட நிகழ்வு நடைபெற்று முடித்துள்ளதென உறுதிப்படுத்தினர். இதற்கான முழுப்பொறுப்பினையும் தவிசாளரே ஏற்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக விளக்கமளித்த தவிசாளர் ஐ.ரி.அமிஸ்தீன் தாம் முறையாகவே இதற்கான அனுமதியினை உலமா சபையின் அங்கீகாரம், நிபந்தனையுடன் வழங்கியுள்ளதாக அறிக்கையினைச் சமர்ப்பித்தார்.
தவிசாளரின் இக்கருத்தினை எதிர்த்த உறுப்பினர்கள் தாங்கள் அனுமதி வழங்கியது சரி என்றாலும், உலமா சபை மற்றும் சபையினால் வைக்கப்பட்ட நிபத்தனைகளை களியாட்ட நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மீறியமை, இதனை தங்களுக்கு முறையாக எழுத்து மூலம் சபை உறுப்பினர்களால் சுட்டிக்காட்டியும் எவ்வித நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்பதே இங்கு பிரச்சினையாகுமெனத் தெரிவித்தனர்.
அதற்கு தவிசாளர் “சபையின் வருமானத்தைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட அனுமதியினை உடனடியாக இரத்துச் செய்தால் நஷ்ட இழப்பீடு கோரி அவர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், நிருவாக ரீதியாக சட்டச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்படும் என்று தெரிவித்தார்.
தவிசாளரின் இக்கருத்திற்கும் மாற்றுக்கருத்து தெரிவிக்கப்பட்டது. அனுமதி வழங்கும் போது எமது நிபந்தனைகளை அவர்கள் மீறிச் செயற்பட்டால், உடனடியாக இது நிறுத்தப்படுமென்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால், இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது. இது தங்களின் தவதறெனச் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இனி வருங்காலங்களில் இவ்வாறான சமூகம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் போது, சபையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமெனவும், தன்னிப்பட்ட முறையில் தவிசாளர் இதற்கு அனுமதி வழங்கக்கூடாதெனவும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் போது, உலமா சபையின் அங்கீகாரம் கருத்துகள் பெறப்பட வேண்டிய அவசியம் சபைக்குத் தேவையில்லை. சபை உறுப்பினர்களின் அங்கீகாரத்தை மாத்திரமே இது விடயத்தில் கருத்திற் கொள்ளப்பட வேண்டுமென சபை உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டடு அது ஏகோபித்த முடிவாக எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எம்.ரீ.எம்.பாரிஸ்
No comments:
Post a Comment