ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் நொக் அவுட் சுற்று ஆரம்பமான முதல் நாளில், பிரபல அணிகளான போர்த்துக்கல் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.
நேற்று (30) பிரான்ஸ் - ஆர்ஜென்டினாஅணிகளுக்கிடையே இடம்பெற்ற நொக் அவுட் சுற்றின் முதலாவது போட்டியில் பிரான்ஸ் அணி 4 - 3 என ஆர்ஜென்டினாஅணியை வீழ்த்தி, காலிறுதிக்கு தெரிவானது.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலை அடித்து, 1 - 1 என சமநிலையில் காணப்பட்டது.
இதனையடுத்து, இரண்டாம் பாதியில் ஆரம்பத்தில் ஆர்ஜென்டினாஇரண்டாவது கோலை (48') அடித்த போதும் பிரான்ஸ் அணி அடுத்தடுத்து, மூன்று கோல்களை (57', 64', 68') அடித்ததன் மூலம் அவ்வணி பலமடைந்தது. அடுத்து, போட்டியின் இரண்டாம் பாதியின் நிறைவில் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் போது ஆர்ஜென்டினாமற்றுமொரு கோலை (90+3') அடித்தது.
ஆயினும் மேலதிகமாக வழங்கப்பட்ட 6 நிமிடங்களுடன் நிறைவு பெற்ற போட்டியின் இறுதியில் பிரான்ஸ் 4 - 3 என வெற்றி பெற்றது.
ஆர்ஜன்டீனாவின் பிரபல வீரர் லயனல் மெஸ்ஸியினால் இப்போட்டியில் எந்தவொரு கோலையும் போட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதோடு, இத்தொடர் முழுவதும் ஒரேயொரு கோலை மாத்திரம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு அடுத்து இடம்பெற்ற நொக் அவுட் சுற்றின் இரண்டாவது போட்டி, உருகுவே - போர்த்துக்கல் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.
போர்த்துக்கல் அணியின் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய குறித்த போட்டியில், உருகுவே அணி 2 - 1 என வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் முதல் பாதியின் 7 ஆவது நிமிடத்திலேயே உருகுவே அணி முதலாவது கோலை அடித்து, போர்த்துக்கல் அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போர்த்துக்கல அணியினால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியாத நிலையில் முதல் பாதி 1 - 0 என நிறைவடைந்தது.
இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் போர்த்துக்கல் தனது முதலாவது கோலை அடித்து (55'), கோல் கணைக்கை சமன் செய்த போதும், அடுத்த 7 ஆவது நிமிடத்தில் உருகுவே அணி மற்றுமொரு கோலை (62') அடித்தது.
அதற்கமைய போட்டியின் இறுதியில் (90+7') உருகுவே அணி 2 - 1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு தெரிவானது.
குறித்த இரு கோல்களையும் உருகுவே அணி சார்பில் எடின்சன் கவானி அடித்திருந்தார்.
எவ்வித கோலையும் அடிக்காத கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போட்டியின் இரண்டாம் பாதியில், தங்களது அணி வீரர் ஒருவர் கீழே வீழ்த்தப்பட்டதால் தங்களுக்கு பிரி கிக் (Free-kick) ஒன்று வழங்கப்படவில்லை என ஆக்ரோஷமுற்றதனால் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.
இத்தொடரில் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது மஞ்சள் அட்டை இதுவென்பதால் அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
உலகக் கிண்ணம் 2018 தொடரில் இங்கிலாந்தின் ஹரி கேனிற்கு (05) அடுத்த படியாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 04 கோலை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், நொக் அவுட் சுற்றிற்கு தெரிவான 16 அணிகளில், நேற்றைய தினம் (30) இரு அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இரு அணிகள் காலிறுதிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment