மாத்தளை நகரில் விடுதியொன்றின் அறையில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களை சேர்ந்த 21 மற்றும் 24 வயதான இளைஞர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த இளைஞர்களில் ஒருவரின் தொலைபேசிக்கு வந்த குறுந்தகவல் ஒன்றின் ஊடாக இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர்.
பின்னர் தொலைபேசி ஊடாக உரையாடி நட்பை தொடர்ந்துள்ள இவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் இவ்வாறு பழகிவந்துள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இருவரும் மாத்தளை நகரில் உள்ள பிரதான விற்பனை நிலையமொன்றில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளனர். இதன்போதும் அவர்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களில் ஒருவர் பணியில் இருந்து விலகி வெளிநாடு செல்லவதாக கூறிய நிலையில் மற்றைய இளைஞர் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பின்னர் இறுதியாக உரையாட வேண்டும் எனக் கோரி கோபத்திற்கு உள்ளாகிய இளைஞன், தனது நண்பனை அழைத்துள்ளார். இதற்கமைய இருவரும் மாத்தளை நகரில் விடுதியொன்றின் அறையில் சந்தித்துள்ளனர்.
வெளிநாடு செல்லும் தீர்மானம் தொடர்பில் இதன்போது இருவருக்கு இடையே வாய்த்தகராறு அதிகரித்துள்ள நிலையில், இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவர்களில் ஒருவரது பையில் இருந்து விஷ போத்தலும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய சந்தேக நபர் மாத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச் சம்பவம் மாத்தளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment