பாலியில் மீண்டும் எரிமலை சீற்றம் - 2000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த புகையால் விமான சேவை பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

பாலியில் மீண்டும் எரிமலை சீற்றம் - 2000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த புகையால் விமான சேவை பாதிப்பு

பாலியில் கடும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலை புகையை கக்கி வருவதால் வானில் சுமார் 2000 மீட்டர் சுற்றளவுக்கு புகை படர்ந்துள்ளது. நேற்று (29) மட்டும் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஒரு ஆபத்தான ஆகங் எரிமலை தற்போது மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுற்றுலா நகரமான குடாவில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் இந்த எரிமலை உள்ளது. அதிவேகத்தில் புகையை கக்கி வரும் இந்த எரிமலை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது. 

2ம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எரிமலையை சுற்றி உள்ள 4 கி.மீ. சுற்றளவுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானில் சுமார் 2000 மீட்டர் உயரத்திற்கு எரிமலை சாம்பல் பரவி உள்ளது. இந்த புகை காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்மேற்கு திசையில் மக்கள் அதிகம் வசிக்கும் ஜாவா நோக்கி நகரும் என பிராந்திய எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் எச்சரித்துள்ளது. 

இந்த சாம்பல் புகை படர்ந்த பகுதிகளில் விமானங்கள் சென்றால் என்ஜின்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். விமான நிலைய ஓடுபாதைகளில் விமானங்கள் தரையிறங்கும்போது வழுக்கி விபத்தை ஏற்படுத்தும். 
இதன் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாலியை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதேபோல் பாலியின் சர்வதேச நுழைவு வாயிலும் நேற்று மாலை வரை மூடப்பட்டது. இதனால் சுமார் 75 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதும், சர்வதேச விமான நிலைய வான் எல்லையில் எரிமலை சாம்பல் படர்ந்திருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. சாம்பல் இல்லை என்பது உறுதி செய்த பிறகே விமான நிலையம் திறக்கப்பட்டு, கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பின்னர் விமானங்கள் இயக்கப்பட்டன. 

இதே ஆகங் எரிமலையானது இதற்கு முன்பு 1963ம் ஆண்டு வெடித்துச் சிதறியதில் சுமார் 1100 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment