வட கிழக்கு மீண்டும் இணைக்கப்பட முடியுமா? - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

வட கிழக்கு மீண்டும் இணைக்கப்பட முடியுமா?

அதிகாரப்பகிர்வு - கருத்தாடல்
பதிவு - 3 : பதிலாக்கம்
வை எல் எஸ் ஹமீட்

கேள்வி : (சட்டம்) அரசியலமைப்பைத் திருத்தாமல் வடக்கு- கிழக்கை இணைக்கமுடியுமா?

பதில் : ஆம். அரசியலமைப்பைத் திருத்தாமலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாமலும் வடக்கு- கிழக்கை இணைக்க முடியும்.

விளக்கம் : அரசியலமைப்பு, 13வது திருத்தம் சரத்து 154A(3)யின் பிரகாரம் “ பாராளுமன்றம் அருகருகேயுள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் இணைந்து ஒரு அலகாக செயற்படுவதற்கு சட்டம் இயற்றலாம். மேலும் அவ்வாறு இணைந்த மாகாணங்கள் தொடர்ந்தும் இணைந்த ஒரு அலகாக அல்லது ( பிரிந்து) தனித்தனி அலகாக (மாகாணங்களாக) இயங்குவதை எவ்வாறு தீர்மானிப்பது என்பதைத் தீர்மானிக்கும் விதத்தையும் சட்டமாக்கலாம்”.

இதன்பொருள், சாதரண பெரும்பான்மையுடன் சாதாரண சட்டத்தின் மூலம் அருகருகேயுள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை இணைப்பதற்கும் அவ்வாறு இணைந்த மாகாணங்கள் தொடர்ந்தும் அவ்வாறே இயங்குவதா அல்லது பிரிந்து தனித்தனியே இயங்குவதா? என்பதைத் தீர்மானிக்கும் முறையையும் குறிப்பிடுவதற்கும் பாராளுமன்றத்திற்கு அரசியலமைப்பின் மேற்படி சரத்து அதிகாரமளித்திருக்கின்றது.

சுருங்கக் கூறின், பாராளுமன்றம் சாதரண பெரும்பான்மை மூலம் வட- கிழக்கை இணைக்கலாம். இணைந்த வட-கிழக்கைப் பிரிக்கலாம்.

மாகாணசபைகள் சட்டம்
இதனடிப்படையில் 1987ம் ஆண்டு, 42ம் இலக்க மாகாணசபைகள் சட்டத்தின் 37ம் பிரிவில் (இது ஒரு சாதாரண சட்டம், அரசியலமைப்புச் சட்டமல்ல) இணைப்பு, பிரிப்புக்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டன.

இப்பிரிவு, ஒரு பிகடனத்தின் மூலம் அருகருகேயுள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை இணைக்கின்ற அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியது.

இங்கு கவனிக்க வேண்டியது, அரசியலமைப்புச் சட்டம் (13 வது திருத்தம்) சாதாரண சட்டத்தின் மூலம் இணைப்பு ஏற்பாடுகளைச் செய்கின்ற அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கியது. பாராளுமன்றம் ஒரு பிரகடனத்தினூடாக இணைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியது. ஆனால் “இந்த இணைப்பு முதலாவது தேர்தல் நடந்த திகதியிலிருந்து சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும் திகதிவரையான காலப்பகுதிக்காகும்” என்றும் அப்பிரிவு கூறியது. இதன் பிரகாரம் முதலாவது மாகாணசபைக்கே இச்சட்டப் பிரிவு செல்லுபடியாகும்; என்பது தெளிவாகின்றது. தற்போது பல தேர்தல்கள் நடைபெற்றுவிட்டதால் இப்பிரிவின் மூலம் இணைப்பைச் செய்யமுடியாது; என்பதும் தெளிவாகின்றது.

பிரிப்பிற்கான முறை
இணைந்த மாகாணங்களை பிரிப்பதற்கான முறையை இதன் உப பிரிவு (2) குறிப்பிடுகின்றது. அதன்படி, இணைந்த மாகாணங்கள் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்க 1988 மார்கழி மாதம் 31 ம் திகதிக்கு முன் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதேநேரம், காலத்திற்கு காலம் இவ்வாக்கெடுப்பை தனது தற்றுணிவில் ஒத்திப்போடுவதற்கும் இப்பிரிவு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியிருந்தது. இதனடிப்படையிலேயே ஜனாதிபதிகள் வர்த்தமானி மூலம் சர்வஜனவாக்கெடுப்பைப் பிற்போட்டுக்கொண்டு வந்தனர்.

நீதிமன்ற நடவடிக்கை 
இந்நிலையில் ( ஜே வி பி யைச் சேர்ந்த) மூவரினால் வட-கிழக்கு இணைப்பிற்கெதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

(1) N. W. M. ஜயந்த விஜேசேகர, கந்தளாய்- வாதி- வழக்கு இலக்கம்- S.C ( FR) Application No. 243/06

(2) A.S. முஹம்மது புகாரி, சம்மாந்துறை- வாதி-வழக்கு இலக்கம்- S.C (FR) Application No. 244/06

(3) L.P. வசந்த பியதிஸ்ஸ, உகன- வாதி- வழக்கு இலக்கம்- S.C ( FR) Application No. 245/06

(வேறு எந்தக் கட்சியும் வட கிழக்கை பிரிக்கக்கோரி வழக்குத் தாக்கல் செய்யவில்லை. சில கட்சிகள் தொலைக்காட்சிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் வட கிழக்கு பிரிக்கப்பட வேண்டுமென்று பேசினார்கள்.)

இந்த வழக்கில் (வழக்கின் சட்ட நுணுக்கங்களுக்குள் செல்ல விரும்பவில்லை.ஆனாலும் ஆர்வமுள்ளவர்கள், சட்ட மாணவர்கள் இதனை வாசிக்கலாம். மிகவும் Interesting ஆன ஒரு வழக்கு). வட- கிழக்கு இணைக்கப்பட்டதே சட்டவிரோதம்; என்று தீர்ப்பளிக்கப்பட்டு இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. இதற்கான பிரதான காரணமாக, முன் சுட்டிக்காட்டிய பிரிவு 37(1)(b) இணைப்பிற்கு முன் நிபந்தனையாக குறிப்பிடப்பட்டிருந்த ஆயுதக் கையளிப்பு முழுமையாக இடம்பெறவில்லை; என்றும் அது தொடர்பாக அன்றைய ஜனாதிபதியினால், “ஆயுதக்கையளிப்பு ஆரம்பித்திருந்தாலும்....” ( இணைக்க முடியும்) என்று ஒரு சேர்க்கையை பிரிவு 37(1)(b) இற்கு அவசரகால சட்டத்தின்கீழ் சேர்த்தது செல்லுபடியாகாது; என்பதுமாகும்.

மீண்டும் இணைப்பு
இப்பொழுது மீண்டும் இணைக்க வேண்டுமானால் அரசியலமைப்புத் திருத்தம் தேவையில்லை. அரசியலமைப்பு ஏற்கனவே பாராளுமன்றிற்கு அதிகாரம் வழங்கியிருக்கின்றது. செய்ய வேண்டியதெல்லாம் மாகாணசபைகள் சட்டத்தின் பிரிவு 37 ஐத் திருத்துவது மாத்திரம்தான்.

தற்போதைய பிரிவு 37 முதலாவது மாகாணசபைக்குத்தான் செல்லுபடியாகும்; என்பதால் தற்போதைய மாகாணசபைக்கு செல்லுபடியாகக்கூடிய விதத்திலும் தற்போது ஆயுதக் கையளிப்புப் பிரச்சினை இல்லை என்பதால் அதனையும் திருத்தினால் மீண்டும் இணைக்க முடியும்.

இது சாதாரண சட்டம் என்பதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. சாதாரண பெரும்பான்மை போதும். அதேநேரம் இணைப்பதற்கோ அல்லது பிரிப்பதற்காக சர்வஜனவாக்கெடுப்பை ஒரு தேவையாக்கவேண்டிய கட்டாயம் இல்லை. விரும்பினால் கட்டாயமாக்கலாம். அல்லது அதைத் தேவையில்லாமலும் ஆக்கலாம். விரும்பினால் நிரந்தரமாகவும் இணைக்கலாம். தேவை சாதாரண பெரும்பான்மை மாத்திரமே. ஆனால் இது ஒரு சாதாரண சட்டம் என்பதால் அவ்வாறு இணைத்தாலும் அடுத்துவரும் அரசாங்கம் அதே சாதாரண சட்டத்தால் பிரிக்கலாம்.

கேள்வி (அரசியல்) அதிகாரப்பகிர்வில் ஒற்றையாட்சி, சமஷ்டி: இதில் எது முஸ்லிம்களுக்கு அதிகம் ஆபத்தானது?

பதில் பதிலாக்கம் இரண்டில் குறிப்பிட்டதுபோல் ஒற்றையாட்சியில் மாகாணசபை மத்திய அரசிற்கு கீழானது. சமஷ்டியில் மத்திய அரசுக்கு சமமானது, சமாந்தரமானது.

ஆளப்படப்போகும் சமூகமான முஸ்லிம்கள் பலமான ஒரு மத்திய அரசின்கீழ் இருப்பதா அல்லது பலமான ஒன்பது மாகாண அரசின்கீழ் இருப்பதா குறைந்த ஆபத்தானது? என்று சிந்தித்துப் பாருங்கள். அதாவது ஒரு சக்கரவர்த்தியாலும் ஒன்பது சிற்றரசர்களாலும் ஆழப்படப் போகின்றீர்களா? அல்லது ஒன்பது சக்கரவர்த்திகளால் ஆழப்படப் போகின்றீர்களா? சிந்தியுங்கள்!!!

No comments:

Post a Comment