பாதிக்கப்பட்டோருக்கு இன்று முதல் உலருணவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 23, 2018

பாதிக்கப்பட்டோருக்கு இன்று முதல் உலருணவு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றுமுதல் உலருணவு நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெள்ளநீர் வடிந்துவரும் பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கப்படவிருப்பதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படவிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கபண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக சமைத்த உணவு வழங்கப்படுகிறது. நாளைமுதல் (இன்று) உலருணவு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தேசிய

சூழல் சட்டத்தின் கீழான 7 கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கபண்டார இதனைத் தெரிவித்தார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சகல வீடுகளையும் சுத்தப்படுத்துவதற்கு தலா 10 ஆயிரம் ரூபா காசோலை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், வெள்ள நீரினால் அசுத்தமடைந்த கிணறுகளை சுத்தப்படுத்துவதற்கு நீர் பம்பிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதுடன், நீர் வடியத் தொடங்கியதும் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற்று கிணறுகள் சுத்தப்படுத்தப்படும். கிணறுகளை சுத்தப்படுத்த புத்தளம் மாவட்டத்தில் 50 நீர்ப்பம்பிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாத்திரமன்றி ஏனைய மாவட்டங்களிலும் இதற்கான தயார்ப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட சகல மாவட்டங்களுக்கும் தேவையானளவு படகுகள் மற்றும் சிறிய வள்ளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்துக்கு மாத்திரம் இதுவரை 70ற்கும் அதிகமான சிறிய படகுகள் வழங்கப்பட்டுள்ளன. 

களுத்துறை, காலி, பதுளை, கம்பஹா, மாத்தறை, கொழும்பு, கேகாலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு அனர்த்தம் ஏற்பட முன்னர் வெளியிணைப்பு இயந்திரத்தைக் கொண்ட படகுகளும், வள்ளங்களும் வழங்கப்பட்டுள்ளன. நாளை மற்றும் நாளை மறுதினம் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முன்னேற்பாடுகள் காரணமாக ஆபத்துக்களிலிருந்து மக்களை மீட்கமுடிந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீர் போத்தல்களுக்கும், உணவுப் பார்சல்களுக்கும் கையேந்தும் நிலையில் இல்லை, அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான சகல தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment