நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாதச் சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தி, முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி சுமூக நிலைமையத் தோற்றுவிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மைக் காலமாக நாட்டின் பல பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் கூட கேள்விகளைத் தோற்றுவித்துள்ளன.
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதற்கு அம்பாறைச் சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. பொலிஸார் அவர்களது கடமைகளை நியாயமாகச் செய்தால் இவ்வாறான இனவன்முறைகளைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கும். ஆனால், அவர்களது செயற்பாடுகள் வன்முறையாளர்களுக்கு தூபமிடுவது போன்றே காணப்படுகின்றன.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் எந்த நோக்கத்துக்காக நல்லாட்சி அரசை உருவாக்க உதவினார்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள். ஆனால், இன்று இடம்பெறும் சம்பவங்களை நோக்கும் போது பலத்த ஏமாற்றத்தையே அவர்களுக்கு அளித்துள்ளது.
ஒரு சில இனவாதக் குழுக்கள் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள இனவாத நடவடிக்கைகள் காரணமாக முழு முஸ்லிம் சமூகமே இன்றைய தேசிய அரசு மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் உடனடியாக கட்டுப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகிறேன் என்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment