நாட்டில் ஏற்பட்டுள்ள உரத்துக்கான தட்டுபாட்டு பிரச்சினை இன்று இரவு தீர்க்கப்பட்டுவிடும் என்று அமைச்சரவை துணை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைவாக பாகிஸ்தான் இலங்கைக்கு 40 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த உரம் இன்று இரவு இலங்கையை வந்தடையும். இதனை துறைமுகத்தில் இருந்து நாட்டில் உரம் தேவைப்படும் பிரதேசங்களுக்கு 200 லொறிகள் மூலம் விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
பாகிஸ்தானில் உரத்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு காரணம் அந்நாட்டில் நிலவிய உரத்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையேயாகும். ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து இந்த தடையை நீக்க பாகிஸ்தான் அரசாங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டது. உர விநியோகத்தில் தாமதம் ஏற்பட இதுவே காரணம் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
உரத்தை பெற்றுகொள்ள சமர்ப்பிக்கப்பட்ட 2 டென்டர்கள் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்த இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, உரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியுதவியில் எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை எனவும், உர தட்டுப்பாடு மாத்திரமே நிலவியதாகவும் தெரிவித்தார். ஆயினும் குறித்த உரத்தட்டுப்பாடு, விரைவில் நீங்கிவிடும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பெரும்பாலான விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்கப்பட்டுள்ளதோடு, பெரும்போக உரத்திற்கென இதுவரை ரூபா 7.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment