வட்டமடு விவசாயிகள் தமது காணிகளில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கடந்த ஒரு மாத காலமாக ஆர்ப்பாட்டங்களையும், வீதிமறியல் போராட்டங்களையும், கடையடைப்புகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் நேற்று (3) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் அப்பிரதேசத்துக்கு சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவம் உடன் பிரசன்னமாயிருந்தார்.
அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு முஸ்லிம்களின் சுமார் 1,500 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாமல் வனபரிபால திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் என்பன தடைவிதித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
1968ஆம் ஆண்டு காலப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்துள்ள தமது விவசாய நிலங்கள், யுத்த காலத்தின்போது செய்கை பண்ணப்படாமல் இருந்தமையால், காடுகள் வளர்ந்து வனாந்தரமாக மாறியிருக்கின்றது. யுத்தம் முடிவுற்றதன் பின்னர் விவசாயிகள் தமது காணிகளை அடையாளப்படுத்தி பல தடவை விவசாயம் செய்து வந்த போதிலும், அண்மைக்காலமாக அது வனப் பிரதேசம் என தெரிவித்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தற்போது விவசாயம் செய்வதற்கு தங்களுக்கு 700 ஏக்கர் காணியையாவது விரைவில் விடுவித்து தருமாறு வட்டமடு விவசாய அமைப்பினர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனை செவியுற்ற அமைச்சர், வட்டமடு விவசாய அமைப்பின் காணிப்பிரச்சினை தொடர்பான அறிக்கையொன்றை தருமாறும், அடுத்த ஓரிரு வாரங்களில் ஜனாதிபதி, பிரதம மந்திரியுடன் பேசி இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார்.
கடந்த ஜுலை மாதம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க, வன பரிபாலன திணைக்கள பணிப்பாளர், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், தொல் பொருளியல் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினருடன் சர்ச்சைக்குரிய இடங்களுக்குச் சென்று கலநிலவரங்களை நேரில் கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment