இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது! இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன். - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 29, 2017

இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது! இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்.

பல தரப்பினரும் இந்த அரசாங்கம் இன்று அல்லது நாளை கலைந்து விடும் என்ற பகல் கனவுடன் இருக்கின்றார்கள். ஆனால் நான் அவர்களிடம் கூறுகின்றேன். தயவுசெய்து அந்த பகல் கனவு காண்பதை விட்டுவிட்டு எங்களுடன் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முன்வாருங்கள். இந்த அரசாங்கம் இன்னும் 3 வருடங்களுக்கு தொடர்ந்து செல்லும் என கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமை செயலால் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான ஆசிரியர் வலுவூட்டல் எனும் தலைப்பில் இரண்டு நாள் ஆராய்ச்சி மாநாடு களுத்துறை பஸ்துண்ரட்ட தேசிய கல்வியியற் கல்லூரியில் இன்று 29.11.2017 ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து இதனை ஆரம்பித்து வைத்தனர். இலங்கையில் முதன்முறையாக இவ்வாறானதொரு மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

இன்று ஆரம்பிக்கப்படுகின்ற இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாகும். இவ்வாறான மாநாடுகள் எதிர்காலத்தில் அனைத்து கல்வியற் கல்லூரிகளிலும் நடாத்தப்பட வேண்டும். அதன் மூலமாக எங்களுடைய ஆசிரியர்கள் ஆராய்ச்சிகளை ஒழுங்கமைக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாது அவர்களுடைய ஆராய்ச்சிகளின் அமைப்பை பெற்றுக் கொள்ளல், கற்பவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஆராய்ச்சி தொடர்பான மாநாடுகளை ஒழுங்குபடுத்தல், மாநாடு போன்ற செயற்பாடுகளில் பங்குபற்றுதலும் மற்றும் பயனுள்ள முறையில் ஒத்துழைப்பு வழங்குவதற்குமான வாண்மைத்துவ ஆசிரியர்களுக்கு வழங்குதல் போன்ற விடயங்களை எங்களுடைய ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே எங்களுடைய நாட்டில் இருக்கின்ற அனைத்து கல்வியியற் கல்லூரிகளிலும் இவ்வாறான மாநாடுகளை ஒழுங்குபடுத்தி அந்தந்த பகுதிகளுடன் தொடர்புடைய விடயங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அது தொடர்பான கருத்து பரிமாறல்களையும் ஏற்படுத்துவதற்கான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் எங்களுடைய ஆசிரியர்களின் திறமை மேலும் வளரும். அதேவேளை எங்களுடைய மாணவர்களின் கல்வி நிலையும் உயரும்.

நாங்கள் புதிய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே புதிய பல விடயங்களை கேட்டறிந்து தெரிந்து கொள்ள முடியும்.

எங்களுடைய நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பலரும் பல விதமான கருத்தக்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பொறுக்க முடியாதவர்களே அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்கள். இன்னும் ஒரு தரப்பினர் எப்பொழுது அரசாங்கம் கவிழும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அது எதுவுமே நடக்காது. எதிர்வரும் 3 வருடங்களுக்கு இந்த நல்லாட்சி தொடரும். இந்த அரசாங்கத்தில் குறைகளும் பிழைகளும் இருக்கின்ற அதனை பேசித் தீர்த்துக் கொண்டு முன் செல்ல அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

எதிர்வரும் தேர்தலிலும் இந்த நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் இன்னும் அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதனை தீர்மானிக்கின்ற சக்தியாக எங்களுடைய மக்கள் இருக்கின்றார்கள். அவர்களின் தீர்மானத்திற்கு அதனை விட்டுவிடுவதே நல்ல ஒரு ஜனநாயகத்தின் பண்பாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். எது எவ்வாறு இருந்தாலும் எங்களுடைய மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமை செயலால் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான ஆசிரியர் வலுவூட்டல் எனும் தலைப்பில் இரண்டு நாள் ஆராய்ச்சி மாநாடு களுத்துறை பஸ்துண்ரட்ட தேசிய கல்வியியற் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து இதனை ஆரம்பித்து வைத்தனர். இலங்கையில் முதன்முறையாக இவ்வாறானதொரு மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment