பிரேசில் ஜனாதிபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

பிரேசில் ஜனாதிபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

நாட்பட்ட விக்கல் காரணமாக கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் பிரேசில் ஜனாதிபதி சயீர் போல்சனாரூவுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

தீராத விக்கல் காரணமாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த ராணுவ மருத்துவமனை, அறுவை சிகிச்சை செய்வதற்காக சா பாலோ நகரில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அவரை மாற்றியிருக்கிறது.

தமது உடல் நல பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடாமல் தமது ட்விட்டர் பக்கத்தில் "கடவுள் விரும்பினால், விரைவில் திரும்புவேன்," என்று போல்சனாரோ கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் தேர்தல் பரப்புரையின்போது தீவிர வலதுசாரி தலைவரான போல்சனாரூ கத்தியால் குத்தப்பட்டார். கடுமையான காயங்களுடன் உடலில் இருந்து 40 சதவீத ரத்தம் வெளியேறிய நிலையில், அவர் பல கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகே உயிர் பிழைத்தார்.

இந்த நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து அவருக்கு தொடர்ச்சியாக விக்கலும் வயிற்று வலியும் இருந்துள்ளது. 10 நாட்களாக இந்த பிரச்னை தொடர்ந்ததையடுத்து, பிரேசில்லியா நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு 24 முதல் 48 மணி நேரம் வரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க அவர் அறிவுறுத்தப்பட்டார்.

ஆனால், அதே நாளில் கூடுதல் பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்காக சா பாலோவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக அவரது அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

2018 இல் சயீர் போல்சனாரூவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரான அன்டோனியோ மெசிடோவின் அறிவுரைப்படி அவர் சா பாலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் ஊடக மேலாளர் ஃபேபியோ ஃபாரியா, சா பாலோவுக்கு கொண்டு செல்லப்படும்போது ஜனாதிபதிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மகன் ஃபிளேவியோ, சிஎன்என் பிரேசில் தொலைக்காட்சியிடம் பேசும்போது, தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வயிற்றில் உள்ள திரவம் வெளியேற்றும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

நாட்பட்ட விக்கல் காரணமாக தனது தந்தைக்கு பேசுவதில் சிக்கல் உள்ளதாகவும், அவரது அறுவை சிகிச்சை கடுமையானதாக இருக்காது என்று நம்புவதாகவும் ஃபிளேவியோ தெரிவித்தார்.

முன்னதாக, மருத்துவமனையில் மேல் சட்டையின்றி படுத்திருந்தவாறு அவரது உடலில் மருத்துவ அளவீடுகள் தொடர்பான குழாய்கள் கணிப்பொறியுடன் இணைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் படம் போல்சனாரூவின் ட்விட்டர் பக்கத்திலேயே பகிரப்பட்டது.

பிரேசில் ஜனாதிபதி பதவியில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டு வந்தார் போல்சனாரூ. கொரோனா பெருந்தொற்றை சரிவர சமாளிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் அவர் ஆளானார்.

இந்த மாத தொடக்கத்தில், தடுப்பூசி கொள்முதலில் அவரது நிர்வாகம் ஊழல் செய்ததாகக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி கொள்முதல், பொது முடக்கத்தை அமுல்படுத்துவது, கவச ஆடை வாங்குவது போன்ற விவகாரங்களில் போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் போல்சனாரோ ஆளானார். 

அந்த நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக கொரோனா உயிரிழப்புகள் பதிவான இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது.

கொரோனாவால் கடந்த ஆண்டே பாதிக்கப்பட்ட பிரேசில் ஜனாதிபதி, சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக மீண்டு வெளிவந்த நிலையில், தற்போது அவசர சிகிச்சை பிரிவில் வேறு உடல் பிரச்னைகளுக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment