நம்பிக்கையில்லா பிரேரணை மீது சபையில் இன்று மாலை வாக்கெடுப்பு : மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போமென அரசு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 19, 2021

நம்பிக்கையில்லா பிரேரணை மீது சபையில் இன்று மாலை வாக்கெடுப்பு : மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போமென அரசு அறிவிப்பு

வலுசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று (20) மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 

பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. 

சபாநாயகர் அறிவிப்பு உட்பட பிரதான சபை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமானது. 

மாலை 5.30 மணிவரை விவாதம் தொடர்ந்தது. ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக எதிரணி உறுப்பினர்களும், எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களும் உரையாற்றியதுடன் அதற்கான காரணங்களையும் முன்வைத்தனர். 

இன்று இரண்டாவது நாளாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது விவாதம் தொடரவுள்ளது.

இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக அரச தலைமைக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் வாக்களிக்கவுள்ளன.

அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய சில எதிர்க்கட்சிகளும் எதிராக வாக்களிக்கவுள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போமென ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபையில் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை முன்வைத்துள்ளார். 

அமைச்சர் என்பதற்கு பதிலாக அமைச்சர்கள் என்பதை உள்ளடக்குமாறு குறிப்பிட்டு குறித்த பிரேரணையை ஒட்டு மொத்த அமைச்சரவைக்கு எதிரான பிரேரணையாக மாற்றுவதற்கு முன்மொழிந்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment