அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலை அத்தியட்சகருக்கு எதிரான பள்ளிவாசல்கள் சம்மேளன கடிதம் தொடர்பில் சம்மேளன தலைவர் விளக்கம் ! - News View

About Us

About Us

Breaking

Friday, July 16, 2021

அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலை அத்தியட்சகருக்கு எதிரான பள்ளிவாசல்கள் சம்மேளன கடிதம் தொடர்பில் சம்மேளன தலைவர் விளக்கம் !

நூருல் ஹுதா உமர்

அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனத்தின் தலைவராய், எங்கள் மூலம் அனுப்பப்பட்ட கடிதமும் அதன் சர்ச்சையும்’ என்று ஒரு நெடிய நாவலே எழுதி விடலாம் என்ற அளவுக்குப் பூதாகரப் படுத்தி விட்டார்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் துவங்கியவர்கள். இது சம்பந்தமாக எழுதியோ பேசியோ மேலும் மேலும் அழுக்குகளைப் பூசிக் கொள்வது, ஓர் அநாகரிகம் என்று அனுபவச் செல்வந்தர்களும் அறிவு ஜீவிகளும், ‘மஷூரா’ வின் போது அழுத்தமாய்ச் சொன்னார்கள் அதனால் என் உள்ளுணர்வும் அந்த நாகரிகமே அழகு என்றும் எற்றுக் கொண்டது என அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகங்களில் பேசு பொருளாக மாறியிருந்த அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலை வைத்திய அத்தியட்சகர் தொடர்பிலான கடித சர்ச்சை தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் மேலும், நிச்சமாக காலம் காத்திரமானது. அது வந்து சதிப் பெட்டகங்களைத் திறக்கும் என்பது திண்ணம். அதுவரை காத்திருப்பேன். நீங்களும் அதைப் பார்த்திருப்பீர். 

ஆனால் என் திருப்திக்காகவும் சில திருத்தங்களுக்காகவும் என் நெஞ்சு தொட்டு காது வழி வந்த சேதி கேட்டு அவரவர் அவர்களுக்குள்ளே கலவரமாகி, வாய் வழியாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கண்டித்தவர்களுக்கும், யதார்த்தம் அறிந்து சிலாகித்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்டித்தவர்களுக்குள் நடுநிலைவாதிகளும் உள்ளனர். கெடு நிலைவாதிகளும் உள்ளனர். நடுநிலைவாதிகளுக்கு விளக்கமளிப்பது எனது கடமை.  

ஆகவே, நடந்ததை விளக்கினேன் தெளிந்தார்கள். அவசரப்பட்டோமோ? என்று கேட்டவர்களும் உண்டு. கேடு நினைவாதிகளுக்கு நான் என்னதான் தெளிவுபடுத்தினாலும் அவர்களின் ‘அஜண்டா’ தெளிவு பெறுவதில் இருக்கவில்லை என்பதை பல ஊசலாட்டங்கள் எனக்குத் துல்லியமாய் எடுத்தியம்பியது. 

உண்மையில் அவர்களின் பிரத்தியேக நோக்கம் என் சமூக சேவைப் பயணத்தைத் தடுத்து, மக்கள் மத்தியில் என் பிம்பத்தைச் சிதைத்து, என்னைச் சிறுமைப்படுத்தி ஓரங்கட்டி, மூலையில் ஒடுங்கிக் கிடக்கச் செய்வதே.

இந்தக் கெடுநிலைவாதிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய முரண்பாவம் உள்ளவர்கள் என்பதால் அவர்களின் பிரயத்தனங்கள் பலனளிக்காமல் போய்விட்டது. 

ஏற்றுவதும் இறக்குவதும் இறைவன் செயல் அதை மண்ணாகப் போகும் மனிதன் செய்ய நினைக்கிறான். தன் கையைக் கொண்டே தன் கண்களைக் குத்துகிறான். இந்த முரண்பாடுகளுக்கும் உடன்பாடுகளுக்குமிடயில் என்னை நசுக்கி, எவ்வளுதான் மூச்சிரைக்க வைத்தாலும், நான் களைத்துப் போகமாட்டேன். 

எல்லாச் சவால்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுமே என்ற நிகழ், எதிர்கால யதார்த்தை மனத்திடத்தில் ஆழ நட்டவனாகவும் அதை அழகுறச் செய்யும் தலைமைத்துவப் பண்புகளை எனக்குள் ஊன்றி இட்டவனாகவுமே தலைமைப் பதவியை ஏற்று கடமை புரிந்து வருகின்றேன் .
.
நான் எழுத்தில் கொடுத்தவாறு அந்த வரயறைக்காலம் வரைக்கும் இதே மன பலத்துடனும் வழி நடத்தும் திறத்துடனும் நானிருப்பேன் என்ற சத்தியத்தை அல்லாஹ்விடம் அமானம் வைத்திருக்கிறேன். அவனிடத்தில் என் அபிமானம் இருக்கும். 

இன்ஷாஅல்லாஹ். காலைப்பொழுதின் மீது சத்தியமாக இரவின் மீதும் சத்தியமாக என்று ‘வொழ்ழுஹா’ சூறாவில் உச்ச நேசத்திற்குரிய றசூலுல்லாஹ்வுக்கு அந்த நாயன் ஆறுதல் கூறுகிறான். கருணையைத் திருச்சொற்களாக்கி நபியவர்களைக் குளிரவைக்கிறான்.

அந்த வசனங்களில் அநேகரின் வாழ்க்கையோடு கூடிய யதார்த்தங்கள் இருப்பதில்லை ஆனால் எனக்கும் என் நிலையில் இருப்போருக்கும் எங்கள் வாழ்க்கையின் நிஜங்களை மற்றும் தடங்களை தத்ரூபமாக்ச் சொல்கிறது அவ்வசனங்கள். அதனால் அவ்வப்போது ஓதி நான் ஆறுதல் கொள்வதுண்டு. குளிர்ச்சி பெறுவதுமுண்டு இந்தச் சூழ்நிலைக்கும் ‘வொழ்ழுஹா’வே எனக்கு ஒத்தடமிட்டுக் கொண்டிருந்தது. 

ஆகவே திண்ணமாக சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது நிச்சயமாக இறைவன் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் என்ற இறைவாக்குகளை உடற் கவசமாக அணிந்திருக்கிறேன். இறைவன் உதவியுடன் நான் ஒருபோதும் சோர்ந்து போகமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment