லெவன்ட் தோட்ட முகாமைத்துவத்திற்கும், மக்களுக்கும் முறுகல் : பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க நேரடியாக விஜயம் மேற்கொண்டார் செந்தில் தொண்டமான் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

லெவன்ட் தோட்ட முகாமைத்துவத்திற்கும், மக்களுக்கும் முறுகல் : பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க நேரடியாக விஜயம் மேற்கொண்டார் செந்தில் தொண்டமான்

எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட லெவன்ட் தோட்டத்தில் இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்ட பழமை வாய்ந்த இல 01 லயன் குடியிருப்புக்கு அருகாமையில் தற்காலிக கூடாரங்களை அமைத்து வசித்து வரும் மக்களை பார்வையிடவும் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் லெவன்ட் தோட்டத்திற்கு இன்று (15) நேரடியாக விஜயம் மேற்கொண்டார்.

அத்துடன் இந்த மக்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கும் நீதியை பெற்றுக் கொடுக்கவும் அவர் நடவடிக்கையெடுத்துள்ளார்.

லெவன்ட் தோட்டத்தில் லயன் 01 குடியிருப்புத் தொகுதியொன்று இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்டது. எட்டியாந்தோட்டை பிரதேச செலயகத்தால், இக்குடியிருப்பில் மக்களை வசிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டு பாதுகாப்பான வசிப்பிடங்களை நோக்கி நகருமாறு கூறப்பட்டதால் இந்த மக்கள் தமது குடியிருப்புக்கு அருகாமையால் தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர்.

என்றாலும், தோட்ட நிர்வாகத்தினர் அடாவடிப் போக்கில் தற்காலிக கூடாரங்களை அமைக்க வேண்டாமெனவும் பாதுகாப்பற்ற இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய குடியிருப்புகளில் சென்று வசிக்குமாறு கூறியும், மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி நிர்வாகம் கூறியதை கேட்க மறுத்ததால் ஒரு மாத காலம் வேலையிலிருந்தும் இடை நிறுத்தப்பட்டனர்.

வேலை இடைநிறுத்தப்பட்டதால் ஒரு மாத காலம் சம்பளமும் இம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் வாழ்வாரத்தை இழந்த மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.

இது தொடர்பில் இ.தொ.காவின் கேகாலை மாவட்ட உப செயலாளர் அண்ணாமலை பாஸ்கர் , செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து உடனடியாக தோட்டத்திற்கு நேரடி விஜயத்தை மேற்கொண்ட அவர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்ததுடன், தோட்ட நிர்வாகத்தின் அடாவடி போக்கை கண்டித்து இவர்களுக்குத் தீர்வையும் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கையெடுத்துள்ளார்.

தற்காலிக கூடாரத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுத்துள்ளார்.

மேலும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளதாவது, தொழில் சட்டப்படி தொழில் செய்யும் போது கவனக்குறைவோ அல்லது தவறுகளோ இழைக்கப்பட்டால் வேலை நிறுத்தம் செய்வது என்பது தொழில் சட்டத்தில் காணப்படுகிறது.

ஆனால் தொழில் நேரத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் கழிவறைகள் கட்டுதல், பாதுகாப்பான குடியிருப்புகளை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுக்களை மேற்கொள்வதால் வேலை நிறுத்தம் செய்வதற்கு தொழில் சட்டத்தில் இடமில்லை.

நாட்டில் உள்ள சிவில் சட்டங்கள் பிரகாரமே நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, தோட்ட நிர்வாகம் இவ்வாறு அராஜகமான செயற்பாடுகளை ஒரு போதும் முன்னெடுக்க முடியாதென தோட்ட மக்களிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்ததுடன், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவிற்கு (PMMD) செந்தில் தொண்டமான் வலியுறுத்தியதுடன், பெருந்தோட்ட அமைச்சிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad