இணையத்தள கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகியது இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

இணையத்தள கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகியது இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள்

கொவிட்-19 தொற்று நோய் காலக் கட்டத்தில் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வரும் இணையத்தள கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து இன்று முதல் விலக முடிவு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பத்தரமுல்லை பொல்துவ சுற்றுவட்ட சந்திக்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று முதல் இணையத்தள கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலக இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

இன்று தொடங்கவுள்ள தொழிற்சங்க செயற்பாட்டில் 23 ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இணையவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள முரண்பாடு, தொழிற்சங்க உரிமைகள், கல்வி உரிமைகள் உட்பட மாணவர்களது உரிமைக்காவும் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொள்ளும் தொழிற்சாங்கத் தலைவர்களை அடக்கும் செயற்பாட்டை தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி 2021 ஜூலை 07 ஆம் திகதி முத்துராஜவெல சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்கவை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அன்றைய தினமே தமது உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொறியில் கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்டிருந்த தொழிற்சாங்க போராட்டத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த, ஒருங்கிணைந்த ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ பண்டார உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

நீதி மன்றத்தில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், தற்சமயம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் இலவச கல்வி உரிமையை நீக்கும் சேர் ஜோண் கொத்தலாவ பாதுகாப்பு சேவை பல்கலைக்கழக சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிராக ஜூலை 8 ஆம் திகதி பாராளுமன்ற சுற்று வட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட குழுவினரையும் இலங்கை அரசியலமைப்பில் காணப்படும் 'எதிர்ப்புக்களைத் தெரிவிக்கும்' அடிப்படை உரிமையை நசுக்கும் வகையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஜோசப் ஸ்டார்லின் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வரும்போது, பொலிஸாரால் பலவந்தமாக கடத்தப்பட்டு தனிமைப்படுத்தல் என்னும் போர்வையில் விமானப் படை முகாமுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளை காரணம் காட்டியே அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் தொழிற்சங்க செயற்பாட்டில் ஒன்றிணைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad