எதிர்கால தலைமுறையினரது வாழ்க்கை கேள்விக்குறியில் ? ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் - அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்துள்ள முயற்சி ! - News View

Breaking

Post Top Ad

Sunday, July 18, 2021

எதிர்கால தலைமுறையினரது வாழ்க்கை கேள்விக்குறியில் ? ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் - அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்துள்ள முயற்சி !

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திருத்தத்தம் தொடர்ந்து செயற்பட்டுத்தப்பட்டால் எதிர்கால தலைமுறையினரது வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படும். ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க எதிர்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.

நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் சர்வ கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கனேஷன், எம்.ஏ. சுமந்திரன், ராஜித சேனாரத்ன, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஷ்வரன் ஆகியோரின் பிரதிநிதிகளும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன உள்ளிட்ட பல தரப்பினர் கலந்து கொண்டார்கள்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் அனைத்து இன மக்களின் அபிலாசைகளுக்கும் அமைய உருவாக்கப்பட்டது. இதன் காரணமாகவே சர்வதேசம் இலங்கையை நல்லாட்சி அரசாங்கம் என்று ஏற்றுக் கொண்டது.

ஜனநாயகத்தின் இலட்சினையை பாதுகாக்க தலைப்பட்டதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்குவதற்கு எத்தணிக்கப்பட்டது. ஆனால் அரசியல் நோக்கங்களின் காரணமாக பிற்பட்ட காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் இலக்கு கேள்விக்குறியாக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை பாரிய நெருக்கடியினை நோக்கி செல்கிறது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும் எதிர்வினையினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படும்.

தற்போதைய நிலையில் அரசியல் கட்சி பேதங்களையும், தனிப்பட்ட கட்சி பேதங்களையும் துறந்து அனைத்து தரப்பினரும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒருமித்து செயற்பட வேண்டும். ஒருமித்து செயற்படாவிடின் சாதகமான தீர்வினை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது. 

நாடு இருண்ட யுகத்தை நோக்கி நகர்கிறது. ஆகவே சிறந்த தீர்வை பெற அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சர்வகட்சிகளின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ
ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட சிறந்த விடயங்களை உள்ளடக்கியதான அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்குவேன். 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

நாட்டில் பல பிரச்சினைகள் தற்போது தலைத்தூக்கியுள்ளது. அரசாங்கம் பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் தீர்வு காண்பதை விடுத்து சர்வாதிகாரமான முறையில் செயற்படுகிறது. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் அனைவரும் வெறுப்புக் கொண்டுள்ளார்கள்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவை பாhதுகாக்கப்பட்டன. பேச்சு சுதந்திரம் தாராளமயப்படுத்தப்பட்டது. இவையனைத்தும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. 

அனைத்து அதிகாரங்களும் ஒரு தனிநபரை மையப்படுத்தி செயற்படுத்தப்படுவதனால் அனைத்து துறைகளிலும் சர்வாதிகார செயற்பாடு தொடர்கின்றன.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொறிமுறைகளுக்கு அப்பாற் சென்று புதிய அரசியலைப்பு திருத்தம் எமது ஆட்சியில் உருவாக்கப்படும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட குறைப்பாடுகள் திருத்தியமைக்கப்படும்.

கொவிட்-19 வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டத்தை கொண்டு அரசாங்கம் மக்களின் பேச்சு சுதந்திரத்தை முடக்குகிறது. பொலிஸ் சேவை ஊடாக சர்வாதிகாரம் செயற்படுத்தப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து தரப்பினருடன் ஒன்றினைந்து செயற்பட தயாராகவுள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன
ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்கவும், பலப்படுத்தவும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த அனைத்து காலங்களிலும் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. 

தற்போது ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. ஆகவே ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நிலை நிறுத்தவும் ஐக்கிய தேசிய கட்சி நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க
நாட்டின் ஜனநாயகம் ஒரு புறம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மறுபுறம் தேசிய பொருளாதாரம் வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளது. தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கிறது. என்ற உண்மையை அரசாங்கம் மறைக்கிறது.

1988 மற்றும் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேசிய பொருளாதாரம் தற்போது போன்று வீழ்ச்சியடைந்தது. அக்காலக்கட்டத்தில் சர்வதேச நாடுகளும், சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு ஆதரவு வழங்கியது.

ஆனால் தற்போது இலங்கையை சர்வதேச நாடுகள் புறக்கணித்து வருகிறது. ஆகவே பொருளாதாரம் பாரிய நெருக்கடியை இனிவரும் நாட்களில் எதிர்க் கொள்ளும்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் பாரிய போராட்டத்திற்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. அக்காலக்கட்டத்தில் பல சாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும் பல கசப்பான சம்பவங்களும் இடம் பெற்றன. அவையே 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான பிரதான காரணியாக அமைந்தது. 

அந்த கசப்பான சம்பவங்கள் இன்று மக்கள் மத்தியில் நீங்காமல் உள்ளது. ஆகவே மக்கள் மனங்களை வெல்லும் வகையில் தேசிய கொள்கையினை அடிப்படையாக கொண்ட திட்டத்தை வகுக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன்
போலியான தேசியவாதத்தை குறிப்பிட்டே தற்போதைய அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது. இனங்களுக்கிடையில் தீர்க்கப்படாத வகையில் இனப் பிரச்சினை காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

இனங்களுக்கு மத்தியில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தவறானவர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்கிறார்கள். ஆகவே இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண இனி வரும் காலங்களில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். 

நாட்டில் வாழும் மக்கள் தங்களை இன அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொள்ள பெருமைக் கொள்கிறார்களே தவிர இலங்கையர் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முன்வருவதில்லை. இதனை இனி வரும் காலங்களில் சீர் செய்து கொள்ள வேண்டும். தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த பொதுவான கொள்கைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் கூட்டத் தொடர் 10 வருடத்திற்கு முன்னர் கொழும்பு தேசிய நூலகத்தில் இடம் பெற்றது. அன்று குறிப்பிடப்பட்ட விடயங்கக்ள தற்போது நினைவில் உள்ளது. 

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பினையும் பாதுகாக்க இந்த அமைப்பு முன்னின்று செயற்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்பட்டது. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வது அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதில் முக்கிய நோக்கமாக காணப்பட்டது. இருப்பினும் அந்நோக்கம் முழுமையடையவில்லை.

எதிர்கட்சியாக இருக்கும் போது குறிப்பிடப்படும் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும். பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெரும்பான்மை கட்சிகளுடன் ஒன்றிணைந்து பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது. ஜனநாயகத்தையும், அமைதியையும் நாட்டில் வாழும் தமிழ் - முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

கடந்த பெப்ரவரி மாதம் பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்து பேரணி இடம் பெற்றது. இப்பேரணியில் தமிழ் - முஸ்லிம் சமூகத்தின் பல்லாயிர கணக்கானோர் கலந்துக் கொண்டார்கள். 

ஜனநாயகத்தை பாதுகாக்கும் வேட்கை இந்த பேரணியின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க நிபந்தனையற்ற ஒத்துழைப்பை என்றும் வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad