நாட்டில் என்றுமில்லாதவாறு மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு - ராஜித சேனாரத்ன - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

நாட்டில் என்றுமில்லாதவாறு மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு - ராஜித சேனாரத்ன

(நா.தனுஜா)

அண்மைக் காலத்தில் நாட்டின் தனியார் துறை சந்தைகளில் கூட தைரொட்சின், புற்றுநோய் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, இதுபோன்றதொரு நெருக்கடிநிலை முன்னெப்போதும் ஏற்பட்டதில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அதுமாத்திரமன்றி நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை என்றும், அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதற்குரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் புதியதொரு மென்பொருளின் உதவியுடன் மருந்துப் பொருட்களின் கையிருப்பு தொடர்பான தகவல்கள் உரியவாறு பேணப்பட்டன. அதன் காரணமாக எமது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

அதனையும் மீறி மருந்துப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில், அப்பிரச்சினை இரு தினங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad