ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் பிள்ளைகள் பழிவாங்கப்படும் நிலை இது சிறந்த தீர்வல்ல பிரச்சினைகளை பேசித்தீர்ப்போம் என்கின்றார் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 13, 2021

ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் பிள்ளைகள் பழிவாங்கப்படும் நிலை இது சிறந்த தீர்வல்ல பிரச்சினைகளை பேசித்தீர்ப்போம் என்கின்றார் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்

பிரச்சினை எதுவாக இருந்தாலும் எமது பிள்ளைகளிடமிருந்து பழிதீர்ப்பது சிறந்ததல்ல. இந்த பணிபகிஷ்கரிப்பினால் அப்பாவி பிள்ளைகளே பாதிக்கப்படுகின்றனர். இது நீதியான செயற்பாடல்ல என தெரிவித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இன்னும் சில மாதங்களில் நாடு முழுமையாக திறக்கப்படும். இன்னும் 4 வாரங்களின் பின்னர் கல்வி மாத்திரமல்ல, அனைத்து துறைகளும் திறக்கப்படுமென தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலைகள் திறக்கமுன் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஒன்லைன் பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு எப்படியாவது வழங்க நடவடிக்கை எடுப்பீர்களா? தற்போது ஆசிரியர்கள் ஒன்லைன் பணிபகிஷ்கரிப்பு நடத்தி வருகின்றனர் என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். 26 வருடங்களாக பல்கலைக்கழகங்களில் சட்டங்களையும், கட்டமைப்பையும் வழங்கிய பேராசிரியராக எனது கருத்து என்னவென்றால், என்ன பிரச்சினையாக இருந்தாலும் எமது பிள்ளைகளிடம் பழிதீர்ப்பது சிறந்ததல்ல. 

இந்த பணிபகிஷ்கரிப்பில் அப்பாவி பிள்ளைகளே பாதிக்கப்படுகின்றனர். இது நீதியான செயற்பாடல்ல. பிரச்சினைகளை பேச்சுவார்த்தையினூடாக தீர்வு காண வேண்டும். மாணவர்களைப் பாதிக்கச் செய்கின்ற நடவடிக்கையை முன்னெடுப்பது மாற்றுவழியாகிவிடாது. இன்னும் 4 வாரங்களின் பின் பாடசாலைகளைத் திறக்கவே எதிர்பார்க்கின்றோம்.

அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் இருபக்கத்தில் இழுத்துக் கொண்டிருப்பதால் பிரச்சினை நீளுகின்றது. இதனிடையே கிராமப்புற பிள்ளைகளே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதற்கொரு தீர்வை நீங்கள் முன்வைப்பீர்களா என கேட்கப்பட்ட போது,

எதிர்பாரா நிலையை சந்தித்திருக்கின்றோம். ஆனாலும் நாடளாவிய ரீதியில் 2096 இணையவழி கற்கை நிலையங்களை நாங்கள் அமைத்திருக்கின்றோம். இணைய வசதியற்ற மாணவர்கள் அங்கு சென்று வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மத்துகம, அளுத்கம பிரதேசத்தில் அங்கு அதிபர்கள் கூட உற்சாகமளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தியதை நான் அங்கு சென்றபோது அவதானித்தேன் என்றார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியதுபோல ஓர் ஆசிரியரை வைத்து இந்த மத்திய நிலையங்கள் சார்ந்த திட்டத்தை விரிவாக்கல் செய்ய ஏன் எதிர்பார்க்கவில்லையென கேட்கப்பட்டபோது, அது சரியானதாகும். எனினும் அனைத்து மாணவர்களும் பொதுவான பரீட்சையை எதிர்கொள்கின்றனர். அனைத்து வரப்பிரசாதங்களும் உள்ள நிலையில், வசதிகளற்ற பிள்ளைகளும் உள்ளனர். அனைவரும் ஒரே வகையான பரீட்சைகளையே எதிர்கொள்கின்றனர். இதற்கு அனைத்து மாற்று வழிகளையும் முயற்சிக்க வேண்டும். அனைத்து கிரமங்களையும் ஒன்றிணைத்து பிரயோசனத்தை பெற்றுக் கொள்வதற்காகவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.

ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, 

ஓரளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. அனைத்தும் வீழ்ச்சியடையவில்லை. அதனை மறுக்க முடியாது. இறுதியில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். 

சம்பள பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. நல்லாட்சியின் காலத்திலிருந்து இது உள்ளது. தீர்க்கப்படவில்லை. அதுபற்றி தொடர்ந்தும் பேச்சு நடத்தி அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கும் வழிகள் உள்ளன. வருகின்ற வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்களை சந்திக்கவுள்ளேன். பேச்சு நடத்தியே தீர்க்க எதிர்பார்க்கின்றோம் என்றார்.

அடுத்த ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் ஏற்கின்ற திகதியை நீடிப்பது பற்றி முடிவுகள் உள்ளதா?

அனைத்து கேள்விகளுக்கும் உடனடி பதிலை அளிக்க விரும்பவில்லை. அனைத்து துறையைச் சேர்ந்தவர்களிடத்தில் பேச்சு நடத்திய பின்னரே தீர்மானம் அறிவிக்கப்படும். கல்வி அமைச்சராக அடுத்தவாரத்தில் நான் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளேன். திகதி நீடிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment