தொழில் அமைச்சின் ஊடாக சட்ட மூலமொன்றை கொண்டு வரவுள்ளோம் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 21, 2021

தொழில் அமைச்சின் ஊடாக சட்ட மூலமொன்றை கொண்டு வரவுள்ளோம் - ஜீவன் தொண்டமான்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தோட்ட முதலாளிமார்கள் சட்டத்திலுள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படாத தோட்டத் தொழிலாளர்களுக்கு 750 ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கவும், தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,000 ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்காக தொழில் அமைச்சின் ஊடாக சட்ட மூலமொன்றை கொண்டு வரவுள்ளதாக தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த ஜீவன் தொண்டமான் மேலும் கூறுகையில், “முதலாளிமார் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தவறினால், அதற்கான தனியாக சட்டமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக நான் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அதாவது, எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்குள் முதலாளிமார் சம்மேளத்துடன் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென்றால், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட ஏற்பாடொன்றை கொண்டு வருமாறு தொழில் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

முதலாளிமார் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பதிவு செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளமும், பதிவு செய்யப்படாத தோட்டத் தொழிலாளர்களுக்கு 750 ரூபா சம்பளமும் வழங்கி வருகின்றனர். மேலும், தற்போது பறிக்கப்படும் கொழுந்தின் நிறைகளையும் அதிகரித்துள்ளனர்.

மேலும், கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தற்போது நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து இறுதி முடிவு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளிவரும் என நம்புகிறேன். அதன் பின்னர், 1,000 ரூபா சம்பளம் தொடர்பில் சட்ட மூலமொன்றை கொண்டுவர முடியும்” என்றார்.

கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது குறித்து எமது சமூக மக்களுக்கு தவறான கருத்து நிலவுகிறது. இது குறித்து நாம் அவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளோம். தற்போது ஆர்வத்துடன் பலர் வந்து கொவிட் தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்துக்கு ஆரம்பத்தில் 25 ஆயிரம் கொவிட் தடுப்பூசிகளை மாத்திரமே தருவதாக கூறியிருந்தனர். எனினும், எமது மாகாண ஆளுநரின் கொவிட் தடுப்பு குழுவினருடன் பேச்சுவார்தை நடத்தி 50 ஆயிரம் தடுப்பூசிகளை ஆரம்பத்தில் பெற்றிருந்தோம்.

தற்போது நுவரேலியாவில், கொவிட் தடுப்பூசியின் ஒரு இலட்சத்து 68 ஆயிரம் பேர் பெற்றுக் கொண்டுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96 சதவீதத்தினரும், 29 சதவீதமான சதவீமான ஆசிரியர்களும் கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment