நாட்டின் ஆசிரியர் சமூகத்திடம் அமைச்சர் கெஹெலிய மன்னிப்புக்கோர வேண்டும் - துஷார இந்துனில் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

நாட்டின் ஆசிரியர் சமூகத்திடம் அமைச்சர் கெஹெலிய மன்னிப்புக்கோர வேண்டும் - துஷார இந்துனில்

(நா.தனுஜா)

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களை 'மிகவும் மோசமானவர்கள்' என்று வர்ணித்தமையானது ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட பாரிய அவமரியாதையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அதிபர், ஆசிரியர் நியமனங்களில் நியாயத்துவத்தைப் பேணாமல், கல்விக் கட்டமைப்பு மிக மோசமான பாதையில் செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தற்போது ஆசிரியர்களைத் தூற்றுகின்றார்கள். எனவே அவருடைய கருத்துத் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளியிடும் அதேவேளை, நாட்டின் ஆசிரியர் சமூகத்திடம் அவர் மன்னிப்புக்கோர வேண்டும்.

நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதை இலக்காகக் கொண்டு, அதற்கு செயல் வடிவம் கொடுத்த சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவின் வழிவந்தவர்கள் என்ற அடிப்படையில், கல்வித் துறையின் போக்கு பெரிதும் கவலையளிக்கின்றது.

கல்விக் கட்டமைப்புடன் அரசியல் அபிலாஷைகள் கூட்டிணையும்போது, அக்கட்டமைப்பு முழுவதுமாகப் பாதிப்படையும். நாட்டின் பல்வேறு துறைகளிலும் அரசியல் ரீதியான தலையீடுகளும் தனிப்பட்ட அரசியல் நலன் நோக்கங்களும் காணப்படுகின்ற போதிலும், கல்வித் துறையில் அதனை அனுமதிக்க முடியாது.

அதேவேளை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களை 'மிகவும் மோசமானவர்கள்' என்று வர்ணித்தமையானது ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட பாரிய அவமரியாதையாகும். அவருடைய அந்தக் கருத்துத் தொடர்பில் நாம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment