ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து : 64 பேர் உயிரிழப்பு, 70 பேர் காயம் : தலைமை அதிகாரியை கைது செய்யுமாறு பிரதமர் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 13, 2021

ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து : 64 பேர் உயிரிழப்பு, 70 பேர் காயம் : தலைமை அதிகாரியை கைது செய்யுமாறு பிரதமர் உத்தரவு

ஈராக்கின் தெற்கு மாகாணம் தி குவாரில் நசிரியா நகரில் இமாம் உசைன் எனும் மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 70 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது. 

ஈராக்கிலும் கொரோனா பரவல் அதிகமாகி வந்ததையடுத்து இந்த மருத்துவமனையில் புதிதாக கொரோனா விடுதி ஒன்றை உருவாக்கினார்கள். 3 மாதத்துக்கு முன்புதான் இந்த விடுதி திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவமனை விடுதியில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே விடுதி முழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. இதில் நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் சிக்கிக் கொண்டனர்.

அவர்கள் தப்பித்து செல்ல முடியாதபடி நாலாபுறமும் தீ சூழ்ந்து கொண்டது. அதற்குள் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

அந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்ற விடுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை. சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, ஓக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மற்றொரு அதிகாரி கூறும்போது, மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார். இன்னும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.

பல்லாண்டு கால சண்டைக்கு பிறகு ஈராக்கின் மருத்துவ கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே மருத்துவமனைகள் முழுமையாக செயல்படவில்லை. பெயர் அளவுக்குதான் அவை செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மருத்துவமனையில் பராமரிப்பு பணி மிகவும் மோசமாக உள்ளது. எனவேதான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீவிபத்து நடந்த மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் 60 க்கும் அதிகமானாோர் பலியான தீ விபத்து சம்பவத்தில், அந்த மருத்துவமனையின் தலைமை அதிகாரியை கைது செய்ய பிரதமர் முஸ்தஃபா அல்-கதீமி உத்தரவிட்டுள்ளார்.

ஈராக்கில் கொரோனா வைரஸ் தொற்றினால் 1.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  17,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாண்டில் கொரோனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இரண்டாவது  தீவிபத்தாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கொரோனா வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர்கள் வெடித்தமையால் ஏற்பட்ட தீயில் 82 பேர் உயிரிழந்துள்ளதோடு, 110 பேர் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment