தனிமைப்படுத்தளை அடக்குமுறைச் சட்டமாகப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு ஒன்றிணையுங்கள் : கூட்டாக வலியுறுத்தியுள்ள 45 சிவில் அமைப்புகள் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

தனிமைப்படுத்தளை அடக்குமுறைச் சட்டமாகப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு ஒன்றிணையுங்கள் : கூட்டாக வலியுறுத்தியுள்ள 45 சிவில் அமைப்புகள்

(நா.தனுஜா)

தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்குமுறைச் சட்டமாகப் பயன்படுத்தி பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதனை ஜனநாயக நாடொன்றில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் அதிகரித்து வரும் ஜனநாயக விரோத செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்களும் எவ்வித பேதங்களுமின்றி ஒன்றிணை வேண்டும் என்று 45 சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியிருக்கின்றன.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம், சுகாதாரப் பணியாளர்கள் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இளம் சட்டத்தரணிகள் சங்கம், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு உள்ளிட்ட 45 சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணப்படுவதனால், தனிமைப்படுத்தல் சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. 

இருப்பினும் அதனைப் பயன்படுத்தி பொதுமக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் சுதந்திரம் ஆகியவற்றை பொலிஸாரைப் பயன்படுத்தி முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதனை ஜனநாயக நாடொன்றில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கொரோனா வைரஸ் பரவல்நிலை தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்குமுறைச் சட்டமாகப் பயன்படுத்தி மக்களின் எதிர்மறையான கருத்துக்களை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டது.

இந்நிலையில் இச்சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பாரிய அடக்குமுறை நேற்று பதிவானது. விவசாயிகள் முகங்கொடுத்திருக்கும் உரப் பிரச்சினை தொடர்பில் பதுளை, பொரலந்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களுக்கு உரியவிதத்தில் சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிராக கொழும்பு - கொம்பனித் தெருவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஆகியவை பொலிஸாரைப் பயன்படுத்தி அடக்கப்பட்டதுடன் கொம்பனித் தெருவில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டதன் பின்னரும் அவர்கள் பொலிஸாரால் பலவந்தமாக பல்லேகல தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதேபோன்று எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையதிகரிப்பிற்கு எதிராக களுத்துறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஜுன் மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப் பாதுகாவலரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மகாலிங்கம் பாலசுந்தரத்தின் குடும்பத்தாருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாளொன்றில் நாடு முழுவதும் இவ்வாறான அடக்குமுறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் கருத்து வெளியிடும் சுதந்திரமானது அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு என்ற விடயம் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் பலவற்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் பதவி வகித்த 2005 - 2015 வரையான காலப்பகுதியில் மக்களின் விமர்சனங்களை அடக்குவதற்கென பாதுகாப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது சாதாரண பொதுமக்கள் உயிரிழந்த சந்தர்ப்பங்கள் பல உள்ளன.

தற்போதைய அரசாங்கத்தின் அதிகரித்து வரும் ஜனநாயக விரோத செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கும் நாட்டு மக்களின் கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும்.

அதனை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் எவ்வித வேறுபாடுகளுமின்றிக் கூட்டிணைய வேண்டும் என்று வலியுறுத்துவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad